Pongal 2025: சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்... சேலத்தில் வெளிநாடு, வடமாநில மாணவர்கள் உற்சாகம்
தமிழர்கள் கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது. பொங்கல் பண்டிகை குறித்தும், தமிழர்களின் பாரம்பரியம் குறித்தும் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறினார்.

உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அனைத்து மதத்தினர் இணைந்து சமத்துவ வழிபாடு நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூ மாலை அணிவித்து வரவேற்றார். பொங்கல் விழாவிற்கு அனைத்து அலுவலர்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். பின்னர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உறியடி ஊட்டியில் கலந்து கொண்டார்.
மேலும் அனைத்து மதத்தினர் மற்றும் வட மாநில மாணவ மாணவிகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் உறியடி போட்டியில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு உறியடித்தனர்.
பின்னர் குழந்தைகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவிழா நடைபெறும் கிராமம் போல் காட்சியளித்தது.

விழாவில் கலந்து கொண்ட வட மாநில மாணவ மாணவிகள் கூறுகையில், "தமிழர்கள் கலாச்சாரம் மிகவும் பழமை வாய்ந்தது. பொங்கல் பண்டிகை குறித்தும், தமிழர்களின் பாரம்பரியம் குறித்தும் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதுபோன்று நாங்கள் எந்த மாநிலத்திலும் கண்டதில்லை. முதலாம் ஆண்டு படிக்கும் எங்களுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் பொங்கல் விழா தமிழகத்தில் கொண்டாட வாய்ப்புள்ளது. அதன் பின்னரும் பொங்கல் பண்டிகையின் போது நாங்கள் கலந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் கலை நிகழ்ச்சிகள் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது" என்று தெரிவித்தனர்.





















