PMK Protest: சௌமியா அன்புமணி கைது... சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ கைது
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பி.எச்டி படிக்கும் மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் அவர்களது ஆய்வறிக்கையை கொடுக்கும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்களை வன்கொடுமை செய்வதாக எம்எல்ஏ குற்றச்சாட்டு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக மகளிரணி செயலாளர் சௌமியா அன்புமணி உட்பட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் எம்எல்ஏ அருள் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சமூக விரோதிகள் போல துரத்தி துரத்தி கைது செய்யும் காவல்துறையை கண்டித்து கோசங்களை எழுப்பினர். மேலும் சௌமியா அன்புமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் அருள், தமிழகத்தில் இளம் பெண்களுக்கும், கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவியை கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். அவரை கைது செய்து பார்த்தபோது 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் வைத்திருக்கிறான். அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி கலந்து கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு 500 போலீஸ் குவிக்கப்பட்டனர். ஆனால், காவல்துறை சட்ட ஒழுங்கை பாதுகாத்து இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பி.எச்டி படிக்கும் மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் அவர்களது ஆய்வறிக்கையை கொடுக்கும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்களை வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது மட்டுமே தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகிறது. இதனை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பெண்களுக்காக போராட்டத்தில் ஈடுபடும் என்றால் சௌமியா அன்புமணியை சமூகவிரோதியை கைது செய்வது போல காவல்துறையினர் கைது செய்தனர். அந்த 500 காவல் துறையினரில் தினசரி இரண்டு பேர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் சென்றிருந்தால் இதுபோன்ற நிலைமை வந்திருக்காது என்று கூறினார்.