சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதையை சீரமைக்கும் பணி 24.04.2023 முதல் 28.04.2023 வரை ஐந்து நாட்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை அன்றாடம் அச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் ஏற்காட்டில் பல்வேறு சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோரிமேடு வழியாக சேலம் - ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. எனது சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதையை சீரமைக்கும் பணி 24.04.2023 முதல் 28.04.2023 வரை ஐந்து நாட்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி வரும் 24.04.2023 திங்கட்கிழமை முதல் 28.04.2023 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதர இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் மாற்று வழியாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அயோத்தியாப்பட்டணம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலையினை ஏற்காடு செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்குறிப்பிட்ட நாட்களில் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.