ஏற்காடு மலைப்பாதையில் பாறை மீது வேன் மோதி விபத்தில் ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்.
முனியப்பன் கோயில் வழுக்கு பாறை பகுதியில் வரும் போது, அங்கிருந்த ஒரு வளைவில் டிரைவர் வேனை திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது. இதனையொட்டி கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த 17 பேர், டெம்போ டிராவலர் வேனில், ஏற்காட்டிற்கு நேற்று முன்தினம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி காண சுற்றுலா வந்தனர். வாகனத்தை அய்யம்பேட்டையைச் சேர்ந்த சிராஜ் (25) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை முதல், ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் மாலையில் தஞ்சாவூர் திரும்ப ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதை வழியாக சேலத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்த வேன் கொட்டச்சேடு அடுத்த முனியப்பன் கோயில் வழுக்கு பாறை பகுதியில் வரும் போது, அங்கிருந்த ஒரு வளைவில் டிரைவர் வேனை திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், அங்குள்ள பாறை மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் வேனின் முன்புறம் மற்றும் பக்க வாட்டு பகுதி நொறுங்கியது. இதனால், வேனை பக்க வாட்டு பகுதியில் அமர்ந் திருந்தவர்கள் படுகாயமடைந்தனர். அப்போது, அவர்கள் வலியால் அலறித்துடித்து சத்தமிட்டனர். இதனையடுத்து அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சம்பல இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஏற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதேசமயம், வேனில் படுகாயமடைந்த அய்யம்பேட்டையைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மகள் ரிஸ்வானா (24). சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த ஏற்காடு காவல்துறையினர், ரிஸ்வானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் காயமடைந்த பாத்திமா ஜோஹரா (65), அவரது மகள் பர்சானா (30) இவரது மகன் ஜப்ரான் (12), குல்சார் சாகுல் (55), அமீது (7) உள்பட 10 க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே. விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், உடனடியாக மீட்புப்பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர்களுக்கான பாதிப்பு மற்றும் வழங்கக்கூடிய சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.