Minister Duraimurugan: "கர்நாடக அரசை மேகதாதுவில் அணை கட்ட விடவே மாட்டோம்" -அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையின் 16 கண் பாலம், சுரங்க மின் நிலையம், அணை பூங்கா மற்றும் வலது கரை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். பின்னர் நீர் வரத்து, நீர் இருப்பு, மேட்டூர் அணை பராமரிப்பு மற்றும் நீர் வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகதாது அணையை கட்ட விடவே மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில் இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேட்டூர் உபரி நீரை பயன்படுத்த கூடாது என வழக்கு போட்டுவிட்டு தற்போது உபரி நீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. மேட்டூர் அணையின் உபரி நீரை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையும் கூட அதற்கு போதுமான அளவில் நிதி தேவைப்படுகிறது.
மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் நூறு ஏரிகளை நிரப்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் 100 ஏரிகள் எங்கு இருக்கிறது என்பதை எங்களுக்கு தெரியவில்லை என்றார். தற்போது வரை 52 ஏரிகளில் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஏரிகளில் காவிரியின் உபரி நீர் நிரப்பும் திட்டத்தை மேச்சேரி வரை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி நீரை பயன்படுத்தி நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின்னர் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார்.