தமிழகத்தில் கொரானா வைரஸ் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. இதனால் விநாயகா் சிலை வடிவமைப்பாளா்கள் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தருமபுாி அடுத்த பழைய தருமபுாி, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் சிலை செய்து வருகின்றனா். பழைய தருமபுாியில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்து கடந்த 13 ஆண்டுகளாக விநாயகா் சிலைகளை விற்பனை செய்து வரும் குடும்பத்தினா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்த சிலைகளே தற்போது வண்ணம் பூசப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து கொண்டுவரப்படும் சாக்பீஸ் பவுடரை கொண்டும், ஹைதராபாத்தில் வாங்கி வரப்பட்ட விநாயகர் சிலை அச்சுகளில் சாக்பீஸ் பவுடரை கரைத்து ஊற்றி தேங்காய் நாருடன் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது, நீர்நிலைகளை பாதிக்காத வகையில் வண்ணங்கள் தீட்டப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூாி, கடற்கரை, கோவில், தியேட்டா், திறந்த நிலையில் அரசு விநாயகா் சதுா்த்திக்கு பொது வெளியில் சிலைகள் வைப்பதற்கு தடை விதித்துள்ளதால் விநாயகா் சிலை வடிவமைப்பாளா்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு அமலில் உள்ளதால், சிலைகள் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரை அடி முதல் 11 அடி வரையில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இச்சிலைகள் கடந்த ஆண்டு விற்கப்படாமல் உள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் செய்யப்பட்ட பெரிய சிலைகளை யாரும் முன்பதிவு செய்யவில்லை. ஒரு சிலர் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை எதுவும் செய்யாமல் இருக்கும் என நினைத்து 5ஆடி வரை ஆா்டா் செய்தனா். ஆனால் அரசு தடை விதித்ததால் ஆா்டரும் கேன்சல் செய்து விட்டனா். இதனால் கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி செய்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய முடியவில்லை இருக்கின்ற காசை கொண்டு இந்தாண்டும் சிலைகள் செய்து அதை விற்பனை செய்து வாங்கிய கடனை கட்டிவிடலாம் என நினைத்தால் தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் செய்ய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறு சிறு விநாயகர் சிலைகளை வண்டிகளில் எடுத்துச்சென்று ஆங்காங்கே விற்பனை செய்து வருகிறோம். ஆனால் எட்டடி, பத்தடி, 11அடி சிலைகளை வெளியில் எடுத்துச் சென்று விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு அதிக விநாயகர் சிலைகள் விற்கப்படும் என்ற நோக்கில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து விட்டதாகவும், நாங்கள் வாடகைக்கு இடம் எடுத்து சிலைகள் செய்து வந்தோம் ஆனால் கடந்த 2 ஆண்டாக சிலைகள் விற்பனை ஆகாததால் அந்த இடத்திற்கு வாடகை கட்ட முடியாமல், தற்போது நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய சொல்கின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். தற்போது கொரானா பாதிப்பு காரணமாக, வருவாய் இல்லாததால், சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.