சேலம்: புதிய வழித்தடங்களுக்கான 2 அரசு பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு
சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு, அடிவாரம் வழியாக கன்னங்குறிச்சி வரையிலான இயங்கும் வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் மற்றும் கன்னங்குறிச்சி பகுதிகளுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் புதிய வழித்தடத்தில் பயணிக்கும் இரண்டு பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். முன்னதாக கன்னங்குறிச்சி வருகை தந்த அமைச்சருக்கு சேலம் மாவட்ட போக்குவரத்து ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கன்னங்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அரசு பேருந்துக்குள் ஏறி தரத்தை பரிசோதித்தார். பிறகு பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்து சிறிது தூரம் பயணித்தார். இந்தப் பேருந்து சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு, அடிவாரம் வழியாக கன்னங்குறிச்சி வரையிலான இயங்கும் வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பெண்கள் பயணிக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பயணமாக கன்னங்குறிச்சி பகுதியிலிருந்து பொதுமக்களுடன் தனது பயணத்தை துவங்கினர்.
இதனைத் தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சேலம் மாநகராட்சி திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடைகளில் இளநீர், தேங்காய் பூ, சேலம் தட்டுவடை செட், தேன் நெல்லி உள்ளிட்டவற்றை ருசித்து மகிழ்ந்தார். பத்து நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் பயனாளிகள் குறித்த 100 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் தெருவோரக் கடைகள் வடிவில் அமைக்கப்பட்டிருந்த பல்சுவை உணவுடன் கூடிய உணவுத் திருவிழாவில், 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரியமிக்க சீம்பால், கூல் வகைகளான கம்பங் கூல், இராகிக் கூல், உளுத்தங்கஞ்சி, கொள்ளு சூப், சேலத்தின் சிறப்புமிக்க தட்டு வடை, இளநீர், மோர், பனங்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளக்கருது, மலை நெல்லி, பாரம்பரிய மிட்டாய் வகைகள், கடலை மிட்டாய், இஞ்சி மரப்பா போன்ற சிறுதானியங்கள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்தவராஜ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.