ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக சேலத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
’’மத்திய அரசு குறியீடான HSN குறியீட்டில் வீட்டை அலங்கரிக்கும் ஆடம்பர துணிகளை போல குடிசை தொழிலான பட்டு நெசவு தொழிலுக்கு தனி குறியீடு வழங்க கோரிக்கை’’
சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், கொண்டலாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, சிந்தாமணியூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜவுளி ரகங்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி 2022 முதல் 12 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கூறி மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் பேசிய சேலம் மற்றும் திருச்செங்கோடு சரக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மாவட்ட தலைவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் கைத் தறி நெசவுத்தொழில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. மூலப் பொருட்கள் விலை உயர்வு. இவை அனைத்தையும் சமாளித்து கொண்டு கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருவதாகவும், தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பட்டு மீதான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஆக உயர்த்த உள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மில்லாத கைத் தறி நெசவுத் தொழில் தற்பொழுது ஜிஎஸ்டி வரியால் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும், இதனால் நெசவு தொழில் முழுவதுமாக கழிந்துவிடும் என்று கூறினார். மேலும், கைத் தறி நெசவுத் தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.
மாநில அரசு உடனடியாக பட்டின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைத்தறி நெசவு சார்ந்த பல லட்சம் குடும்பங்கள் உள்ளது. மேலும், மத்திய அரசு குறியீடான HSN குறியீட்டில் வீட்டை அலங்கரிக்கும் ஆடம்பர துணிகளை போல குடிசை தொழிலான பட்டு நெசவு தொழிலுக்கு தனி குறியீடு வழங்கப்பட வேண்டும் எனவும், கைத்தறி நெசவு மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றதால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.