Salem Airport: சென்னை, பெங்களூர், கொல்கத்தாவிற்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை
சேலம் விமான சேவை வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் துவங்கும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதி.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் ட்ரூஜெட் விமான நிறுவனத்தின் சார்பில் சேலம் சென்னை, சென்னை சேலம் விமான போக்குவரத்து தினமும் ஒருவேளை மட்டும் இருந்தது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மத்திய அரசின் உதான் திட்டத்தில் சேலம் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால், சேலத்தில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 40 முறை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சேலம் விமான நிலையம் உதான் 5.0 திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்தை துவங்க இரண்டு விமான நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அதன்படி அல்லையன்ஸ் விமான நிறுவனம் பெங்களூர் - சேலம், கொச்சின் சேலம் பெங்களூர் என போக்குவரத்தை துவங்குகிறது. அதேபோல இண்டிகோ விமான நிறுவனம் பெங்களூர் சேலம், ஹைதராபாத் சேலம் பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்தை துவங்க முன் வந்துள்ளது. இந்த போக்குவரத்து வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் போக்குவரத்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், விமான நிலைய இயக்குனர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலத்தில் விமான சேவை 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டதின் அடிப்படையில், உதான் திட்டத்தின் கீழ் சேலம் விமான சேவை வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் துவங்கும். இதற்காக இண்டிகா விமான நிறுவனமும், அலையன்ஸ் விமான நிறுவனமும் முன்வந்துள்ளது. முதல் கட்டமாக பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு வந்து ஐதராபாத் செல்லும் வகையிலும், அதேபோல் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கொச்சிக்கும் விமான சேவை இயக்கப்பட உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை புரிவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமான நிறுவனங்களும், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை புரிய தயார் நிலையில் உள்ளது. அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். படிப்படியாக சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டு, விரைவில் பன்னாட்டு விமான நிலையமாக மாறும். விமான நிலைய விரிவாக்க பணிக்காக, பொதுமக்கள் சிலர் தாமாக நிலம் கொடுக்க முன்வந்துள்ளனர்" என்று கூறினார்.