"தனியார் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்க.." சேலத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்..!
கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் விவசாய கால்வாய்கள் மற்றும் வசிஷ்ட நதியில் வெளியேற்றுவதாலும் அப்பகுதியில் நிலத்தடி நீர், நதி மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே மரவள்ளி கிழங்கு அரவை ஆலைகள் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துவதாலும், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் விவசாய கால்வாய்கள் மற்றும் வசிஷ்ட நதியில் வெளியேற்றுவதாலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் மற்றும் வசிஷ்ட நதி பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
தனியார் ஆலைக்கு எதிராக போராட்டம்:
இந்த நிலையில் காட்டுக்கோட்டை கிராமத்தில் புதிதாக மேலும் ஒரு தனியார் சேகோ ஆலை நிறுவ அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர் கோட்டை மைதானம் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் புதிதாக நிறுவ உள்ள சேகோ ஆலையினால் அப்பகுதியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள விவசாயிகள் இந்தப் போராட்டத்தின் வாயிலாக தனியார் சேகோ ஆலை அமைக்க அரசு வழங்கியுள்ள அனுமதியிணை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சிறிய ஆலை முதல் பெரிய ஆலை வரை பல ஆலைகள் உள்ளது. இதற்கிடையே புதிதாக குமார் சேகோ ஆலை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகள் கழிவு நீரை அந்தப் பகுதியில் உள்ள நீர் நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யாமல் திறந்து விடுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
அனுமதியை ரத்து செய்ய வேண்டும்:
அதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் புதிதாக சேகோ ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளதாக கூறினர். மேலும் மரவள்ளி கிழங்கு மட்டும் விவசாயம் செய்யக் கூடியவர்கள் இந்த ஆலைக்கு அனுமதிக்க வேண்டுமென மனு அளித்துள்ளனர். ஆனால் மரவள்ளிக் கிழங்கு என்பது குறைந்த அளவு தண்ணீர் அல்லது தண்ணீர் இல்லாமலும் இயற்கையாக வரும் மழையின் மூலமாக விளையக்கூடியது. அதனால் சேகோ ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் அரிசி, மஞ்சள் போன்ற பல்வேறு விவசாயப் பொருட்கள் விளைச்சல் செய்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக புதிதாக அமைய உள்ள சேகோ ஆலையின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.