(Source: ECI/ABP News/ABP Majha)
EPS Speech: திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப மக்களை தான் மக்களாக பார்க்கிறார் - இபிஎஸ் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதிக்கு வாக்கு செலுத்தும் வயது கூட வந்து இருக்காது, ஆனால் அவரை தற்பொழுது உள்ள அமைச்சர் புகழ்ந்து பேசி வருகிறார்.
சேலம் மாநகர் இஸ்லாமிய மக்கள் 500 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து மசூதியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகை மேற்கொண்டார். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "திமுக ஆட்சிக்கு வந்தால் 520 வாக்குறுதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது.ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஏதோ சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு 520 அறிவிப்புகளையும் நிறைவேற்றிவிட்டதாக பொய்யாக சொல்லி வருகிறார். இது விஞ்ஞான உலகம், எதை சொன்னாலும் மக்கள் கேட்பதற்கு தயாராக இல்லை, இதை சொன்னால் ஏற்றுக் கொள்வார்களோ, ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். அதை விட்டுவிட்டு இஷ்டம் போல் எதை வேண்டுமானாலும் பேசி வந்தால் முதல்வரின் அறியாமையை தான் பார்க்க முடிகிறது. குறிப்பாக 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக மார்தட்டி திமுக அரசாங்கம் வருகிறது. இது முழுபூசணிக்காவை சோற்றில் தமிழக முதல்வர் மறைத்து வருகிறார். திமுக இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு துறைவாரியாக கொள்ளையடித்தது தான் சாதனையாக செய்துள்ளனர் என்றார்.
தமிழகத்தில் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஏழை, எளிய மக்கள் எவ்வாறு வாழமுடியும், மக்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாக உள்ளது என்பது குறித்து தமிழக முதல்வருக்கு தெரியாது. தமிழக மக்கள் சந்தோஷமாக வாழ்வதாக பேசி வருகிறார். மக்களின் சிரமம் பற்றி அவருக்கு தெரியவில்லை, குறிப்பாக பொதுமக்கள் அணியும் சட்டை, சேலை உள்ளிட்டவை அனைத்தும் விலையேறிவிட்டது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும். 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அதிமுக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதால் மக்களின் சிரமங்கள், துன்பங்கள் அனைத்தும் அறிந்து இருப்பதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். திமுக ஆட்சியில் உள்ள பொம்மை முதலமைச்சர், மக்களைப்பற்றி கவலைப்படாமல் உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்பம் தான் மக்கள், குடும்ப மக்களை தான் மக்களாக பார்க்கிறார். குடும்பத்தில் உள்ள மக்கள் தான்; பதவிக்கு வரவேண்டும், ஏற்கனவே ஏகப்பட்டதை கொள்ளையடித்து வருகிறார்கள். தற்போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். நிச்சயம் இது நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதால் மக்கள் படாதபாடு பாடுகிறார்கள். மன்னர் ஆட்சி காலத்தில் தான், வாரிசு அரசியல் தொடர்ந்து வரும், அதேபோன்று திமுக ஆட்சியில் கருணாநிதி, அவரைத் தொடர்ந்து முக.ஸ்டாலின், தற்போது உதயநிதி, இன்பநிதி என்று வரப் பார்க்கிறார்கள். திமுக கட்சி அல்ல; ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும் கடும் விமர்சனம் செய்தார். உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதிக்கு வாக்கு செலுத்தும் வயது கூட வந்து இருக்காது, ஆனால் அவரை தற்பொழுது உள்ள அமைச்சர் புகழ்ந்து பேசி வருகிறார். இதுதான் வேடிக்கையாக உள்ளது அடிமைத்தனமாக உள்ளது என்றும் பேசினார்.
அதிமுக ஆட்சியில் மக்களை தான் பிள்ளைகளாக எம்ஜிஆர், ஜெயலலிதா கருதினார்கள். மக்களுடைய பிரச்சினைகளை எண்ணி, எண்ணி அதற்கு தீர்வு கண்டது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தான். இதுபோன்ற பெருந்தலைவர்கள் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து அதிமுக மேற்கொண்டு வருகிறது. திமுக கட்சி ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும், குரங்கு மரத்திற்கு மரம் தாவுது போன்று திமுக ஒவ்வொரு கூட்டணியாக தாவி பதவி சுகத்தை அணிவித்தது.ஸ்டாலின் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஒரு நாளாவது, ஒரு முறையாவது பதவி அதிகாரத்தில் இல்லாமல் அவர்களுக்கு தூக்கம் வராது எனவும் விமர்சனம் செய்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாளாவது கட்சியில் இருக்கும் தொண்டர்கள் முதலமைச்சராக இருக்கலாம் என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதிமுகவை பொருத்தவரைக்கும் சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் கூட வரமுடியும், திமுகவில் ஒருபோதும் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர்ந்த பதவிக்கு வர முடியும். மன்னர் ஆட்சியாகவும், குடும்ப ஆட்சியாக வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து ஒரு புள்ளி அளவும் அதிமுக மாறாது. அதிமுகவைப் பொறுத்த வரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது. அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது. அதிமுகவின் அவைத்தலைவர் ஒரு இஸ்லாமியர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு அப்துல்கலாமை ஆதரித்த கட்சி அதிமுக கட்சி தான்; ஆனால் அப்துல் கலாமிற்கு எதிர்ப்பு திமுக கட்சி வாக்களித்தது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் நாடகமாடி வருவதாக விமர்சனம் செய்தார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்தும், தற்பொழுது விலகி விட்டோம். இதை பொறுத்துக் கொள்ளாமல் சிறுபான்மை மக்களின் ஓட்டு சிதறிவிடுமோ என்று முக.ஸ்டாலின் பேசி வருகிறார். பகல் வேடம் போடும் கட்சி, தலைவர் திமுக கட்சியில் தான். சிறுபான்மை மக்களை பாதுகாப்பு அரனாக இருந்து அதிமுக பாடுபடும் என்றும் பேசினார். திமுக தலைவர் ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு என்ன செய்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெறசெய்ய வேண்டும், இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு ஆதரித்தால் உங்களுடைய ஒவ்வொருவரின் குரல் நாடாளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்றும் உறுதியளித்தார். தமிழக முதல்வரை எத்தனைபேர் சந்திக்க முடியும், குறிப்பாக அமைச்சரை கூட சந்திக்க முடியாத சூழலில் தான் திமுகஆட்சியில் உள்ளது. எப்படி வேண்டுமானாலும் நாடகத்தை அரங்கேற்றுவார்கள், மக்கள் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார். தமிழக மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டிய சாவியை தமிழக முதல்வர் தொலைந்துவிட்டது. திமுக என்பது தந்திரமாடல் என்றும் விமர்சனம் செய்தார். மக்களிடமிருந்து பெறப்பட்ட எத்தனை மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. அந்த மனுக்கள் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. பெட்டியை திறந்து மனுக்களுக்கு முதல்வர் தீர்வு காண்பாரா என்று பார்ப்போம். அதுகுறித்து கேள்வி எழுப்புங்கள் என்று செல்லும் இடமெல்லாம் மக்கள் தன்னிடம் கோரிக்கை வைப்பதாக பேசினார். எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை திமுகவிற்கு புகட்டுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.