DMK Vs ADMK: அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
சேலம் மாமன்ற இயல்பு கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் சரமாரியாக தாக்கியதால் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேயர் வெளியேறினார்.

சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சனைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக, விசிக மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நான்கு மண்டலங்களிலும் குடியிருப்பு சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாபேட்டை மண்டலத்திற்கு குறைந்தபட்ச தொகை குறைக்கப்பட்டுள்ளதாக புகாரினை முன்வைத்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய திமுக கவுன்சிலர் குணசேகரன், அம்மாபேட்டை மண்டலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையே திமுக கவுன்சிலர்கள் சிலர் இமயவரம்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து, கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண்டர்களை குறைந்த விலைக்கு கேட்கும் காண்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக கூடுதல் தொகைக்கு டெண்டர் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 45 ஆவது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த சுகாசினி என்பவர் திடீரென யாதவமூர்த்தியை கன்னத்தில் அறைந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே சரிந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் திரண்டதால் திமுக அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூட்டரங்கை விட்டு வெளியேறினர். தொடர்ந்து திமுக கவுன்சிலர் சுகாசினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாட்டோம் எனக் கூறி மேயர் இருக்கை முன்பு அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி தன்னை தாக்கிவிட்டதாக கோரி திமுக கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
தர்ணாவில் ஈடுபட்டு வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம், அதிமுக மாவட்ட செயலாளர் (பொறுப்பு) ஏ.கே.எஸ்.எம்.பாலு, முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கை ஆக்கிரமித்து தர்மாவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அதிமுகவின் பல பிரிவுகளைச் சேர்ந்த தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ் மூர்த்தி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் உடனடியாக அவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து, அதிமுக மாமன்ற உறுப்பினர் சசிகலாவும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய திமுக மாமன்ற உறுப்பினர்களை மூன்று மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாமன்ற கூட்ட அரங்கில் இருந்து வெளியேற மாட்டோம் என்று அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.





















