Pongal Gift: சேலத்தில் 10 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு முழுக் கரும்பு வழங்கிடும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
பொங்கல் பரிசு நகர்புறப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் கடந்த 03.01.2023 முதல் 08.01.2023 வரை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு:
அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நாளை 09.01.2023 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கிட உள்ளனர்.
10 லட்சம் குடும்பங்கள்:
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டினம், மின்னாம்பள்ளி மற்றும் காரியப்பட்டி ஆகிய நியாய விலைக்கடைகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் நேரடி ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு என மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு முழுக் கரும்பு வழங்கிடும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்திற்குத் தேவையான கரும்புகள் அனைத்தும் சேலம் மாவட்டத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தேவையான கரும்புகளையும் இங்கிருந்து தொடர்புடைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பூலாம்பட்டி, குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கரும்பின் தரம் குறித்தும், கரும்பை சுவைத்து ஆய்வு செய்தார்.
இடைத்தரகர்களா..?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டத்தில் 10,74,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கரும்பு கொள்முதல் செய்வதில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரும்பு கொள்முதல் செய்ய வேளாண் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் தனிக்குழு அமைத்தும் விவசாயிகளிடம் கரும்பு நேரடியாக இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு அரசு நேரடியாக ஆன்லைன் மூலம் அவரவர் வங்கி கணக்கு பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் ஒரு சிலர் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கடந்த ஆட்சி காலத்தில் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தனி குழு அமைத்து ஆறடி உயரமுள்ள தரமான செங்கரும்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.