பதைபதைத்த தமிழ்நாடு.. ஆத்தூர் ஆணைவாரியில் பெண் மற்றும் குழந்தையை மீட்ட தீரர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரின் உயிரை காப்பாற்றிய அப்துல் ரகுமான் மற்றும் லட்சுமணனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஆத்தூர் அருகே வெள்ளப்பெருக்கில் சிக்கி போராடிக்கொண்டிருந்த பெண் மற்றும் குழந்தை இருவரையும் பத்திரமாகக் காப்பாற்றிய இருவருக்கு குவியும் பாராட்டுக்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் தொலைபேசியில் அழைத்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் அருகில் உள்ள ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது, நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண், குழந்தை உள்பட 5 பேர் சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர் வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். அப்போது அவர்களை காப்பாற்றுவதற்காக உயிரை பணயம் வைத்த இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.
பின்னர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர். இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரின் உயிரை காப்பாற்றிய அப்துல் ரகுமான் மற்றும் லட்சுமணனுக்கு பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர். நடிகர் கமல்ஹாசன் தொலைபேசியில் அழைத்து அவர்களது துணிச்சல் மிக்க செயலைப் பாராட்டினார். மேலும், தமிழக அரசு சார்பில் அப்துல் ரகுமான் மற்றும் லட்சுமணனுக்கு குடியரசு தினத்தன்று விருது வழங்க சேலம் வனச்சரகத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்துல் ரகுமான் மற்றும் லட்சுமணனை சேலம் வனசரக அலுவலர் பெரியசாமி நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து அப்துல் ரஹ்மான் மற்றும் லட்சுமணன் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தேன். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெண் குழந்தையுடன் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அங்கிருந்தவர்கள் அவர்களை வீடியோ அடிப்பதிலும் செல்ஃபி எடுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தனர். லட்சுமணன் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட நானும் அவர்களை பத்திரமாக மேலே அனுப்புவதில் கவனம் செலுத்தி வந்தேன். திடீரென நிலைதடுமாறி நானும் லட்சுமணனும் வெள்ளத்தில் அடித்துச் சென்றோம். நாங்கள் இருவரும் பிறருக்கு செய்த உதவிதான் எங்களை காப்பாற்றுவது என்று கூறினார். நாங்கள் செய்த செயலுக்கு அனைவரும் பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மாவட்ட வனத்துறையினர், பல அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.