எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட தயார்- சொன்னது யார் தெரியுமா..?
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் தான் நேரடியாக போட்டியிட தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பெங்களூர் புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையத்திடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி செய்துள்ள தவறுகள் அனைத்தும் ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளதால் உரிய நீதி கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்றார்.
தொடர்ந்து, பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என ஜெயலலிதா தெரிவித்திருந்த நிலையில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் அதிமுக மட்டும்தான் இடம்பெறும். பாஜகவிற்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியவில்லை. அவருக்கு தில்லும், திராணி இருந்தால் அமைச்சரவையில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கொடுக்க மாட்டோம் என்று அமித்ஷாவிற்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை செய்தியாளருக்கு கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

ஜெயக்குமார் 15 நாட்களாக காணாமல் போய்விட்டார். நானும் என் மகனும் தோற்று விட்டோம், நான் முடிசூடா மன்னனாக இருந்தேன் பிஜேபி கூட்டணியால் தோல்வி அடைந்து விட்டேன் என்று ஜெயக்குமார் கூறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வியடைந்தேன் என்று சொல்லிய ஜெயக்குமார் தற்போது மாற்றி பேசுகிறார். அவரைப் போன்று அதிமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும் மாற்றி பேசி வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகிய யாரும் ஆட்சியில் பங்களிக்கவில்லை. திராவிட கட்சிகள் மிகவும் கூர்மையாக இருந்தனர். இந்த முறை தேர்தலில் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் செலவு செய்தாலும் அதிமுக வெற்றி பெறாது. அதிமுக முடிவுக்கு வந்துவிட்டது. அதனை மீட்டெடுக்கும் வேலையை நான் பார்த்து வருகிறேன் என்றார்.
அதிமுகவின் பெரும்பான்மை எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், பொதுக்குழு செயற்குழுவிற்கு அவர் மரியாதை கொடுக்கவில்லை. கூட்டணி பேச்சு வார்த்தை ஆறு மாதத்திற்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி அமித்ஷா வந்தவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தனக்கு பின்னால் எந்த அரசியல் கட்சியும், எந்த அமைப்பும் இல்லை. அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். கோடநாடு வழக்கில் உரிய விசாரணையை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். ஏற்கனவே 17 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? என்றார்.
மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் தான் நேரடியாக போட்டியிட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நேற்று கோவையிலிருந்து சேலம் வந்தேன் அப்போது மக்களை சந்தித்தேன். அவர்கள் எடப்பாடி பழனிசாமி தோற்கடித்த பின்பும் என்று மக்கள் கூறுகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் இந்த முறை வெற்றி பெறாது. அதிமுக என்னுடைய கட்சி எனவும் எடப்பாடி பழனிசாமி என்னிடம் இருந்து தான் அதிமுகவை மீட்க வேண்டும் என்றார்.





















