சேலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
அதிமுகவினர் தரணிதரன் மாமனார் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் மகன் வீடு மற்றும் தங்கமணியின் நெருங்கிய நண்பருமான மாநில நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தை விட 4.85 கோடி கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் பூர்வீக வீடு, சேலம் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, குரங்குச்சாவடி பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான குழந்தை வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்பட 69 இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 6 மணி முதல் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு மற்றும் சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பரும் மாநில நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான குழந்தை வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் (அஸ்வா பார்க்) மற்றும் சேலம் மரவனேரி பகுதியில் உள்ள கார்ப்ரேஷன் ஒப்பந்ததாரர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரின் வீடு உள்பட 4 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் தரணிதரன் மாமனார் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் மாமனார் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தங்கமணியின் நண்பர் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் குழந்தைவேலு சொந்தமான நட்சத்திர ஹோட்டல் மற்றும் குரங்குசாவடி உள்ள அவரது வீட்டில் நாகை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மரவனேரியில் அமைந்துள்ள குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீட்டில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் இந்த சோதனையானது அன்று மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.