Salem: சேலம் மாநகராட்சியில் ஜனநாயகம் இல்லை என அதிமுக வெளிநடப்பு - கைத்தட்டி வெளியே அனுப்பிய திமுகவினர்
திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சியில் மாமன்ற இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற பாலச்சந்தருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் தொடங்கியவுடன் திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் பேச தொடங்கினார். அப்போது அவர், சேலம் மாநகராட்சி பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் சாக்கடையை சரிவர பராமரிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் நெடுஞ்சாலைகளில் உள்ள சாக்கடைகளால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலர் செல்வராஜ், மாநகராட்சிக்கு செலுத்தப்படும் வருவாயில் குளறுபடி உள்ளதாக கூறினார். எனவே அதனை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அனுமதி பெற்ற கடைகள் எத்தனை, அனுமதி பெறாத கடைகள் எத்தனை என உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து அனுமதி இல்லாத கடைகளை அகற்ற வேண்டும் என்றார். மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாய் பாலூட்டும் நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை உடனடியாக மாநகராட்சி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல மாநகர பகுதியில் உள்ள கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சியில் வேறு பெயர்களில் இவர்கள் டெண்டர் எடுக்கும் நிலை உள்ளது. எனவே சேலம் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதேபோன்று மாநகராட்சி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வசதியை செய்து கொடுத்து மாநகராட்சி வருவாய் இயற்ற வேண்டும் எனவும் யோசனை வழங்கினார்.
பின்னர் பேசிய அதிமுக கவுன்சிலர் சசிகலா, சேலம் மாநகரப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி ஏரி ரூபாய் 11 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு கூட நிறைவு பெறாத நிலையில் உள்ள டைல்ஸ் முழுமையாக வெளியே வந்துவிட்டது. மேலும் பள்ளப்பட்டி ஏரி அருகில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் விளையாடும் பார்க் இரவு நேரங்களில் பார் ஆக மாறி வருகிறது. எனது அதற்கு பாதுகாப்பு வேலி அமைத்து காவலாளி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இவரைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி பேசத் தொடங்கினார், சேலம் மாநகராட்சி பகுதிகளில் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக பேசத் தொடங்கிய நிலையில், திமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகளை பேச வேண்டும். எனவே அதிமுகவினரை பேசியது போதும் என்று கூச்சலிட்டனர். மாநகராட்சியில் மக்கள் பிரச்சனையை பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறினார். உடனடியாக திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக கூறினர். இதற்கு உடனடியாக திமுகவினர் கைகளை தட்டி அதிமுகவினரை வெளியேறுமாறு கூறியதால் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.