(Source: ECI/ABP News/ABP Majha)
சேலம் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆகியவற்றை கீழே வீசி எறிந்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்துள்ள தளவாய்பட்டி பகுதியில் சேலம் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 42 வருடங்களுக்கு முன்பு ஆவின் பால் பண்ணை அமைக்க அங்குள்ள கிராம மக்களின் பலரும் நிலம் கொடுத்திருந்தனர். இவர்களில் 32 பேருக்கு வீட்டுமனை நிலம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இதுவரையிலும் பட்டா வழங்கப்படவில்லை.
பலமுறை பட்டா கேட்டு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 32 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஆவின் நிறுவனத்திற்கு கோஷங்கள் எழுப்பிக் கொண்டு வந்தனர். தாங்கள் கொடுத்த விவசாய நிலத்தை உழபோகிறோம் என ஏர் கலப்பையுடன் கொண்டு வந்தனர் சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். பின்னர் பலமுறை எங்களின் நிலத்தை பால் பண்ணைக்கு வழங்கினோம் அதற்காக வீட்டு நிலம் கொடுத்தார்கள் ஆனால் இதுவரையிலும் பட்டா கொடுக்கவில்லை என்று முன்னாள் பால் வளத்துறை அமைச்சரிடம் கூறினோம். தற்போது உள்ள பால் வளத்துறை அமைச்சர் சேலம் வந்தபோது அவரிடமும் மனு அளித்தோம். எங்களுக்கு வீட்டு நிலம் கொடுத்த ஆவின் நிர்வாகம் அதற்கான பட்டாவை வழங்க வேண்டும். ஆதலால் இந்த தொடர் பட்டினி போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆதார் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆகியவற்றை கீழே வீசி எறிந்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சேலம் இரும்பாலை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
இதனை அடுத்து ஆவின் நிர்வாகம் அருகிலேயே உள்ள கோவில் பகுதிக்கு சென்று அனைவரும் அமர்ந்தனர். அப்போது மூதாட்டி ஒருவருக்கு சாமி வந்தது தொடர்ந்து சுமார் 20 நிமிடம் அந்த மூதாட்டி சாமி வந்து ஆடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஆவின் நிறுவனம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 32 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள் உடனே பட்டா வழங்கி உதவிட வேண்டும் என்று தெரிவித்தார்.