தமிழ்நாட்டின் கடனை அடைக்க 2.69 லட்சத்திற்கு காசோலை எடுத்து வந்த நபரால் நாமக்கலில் பரபரப்பு
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.60 லட்சம் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பங்கான ரூ.2.60 லட்சத்தினை காசோலையாக வழங்க வந்த நபரால் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த கடனை அடைக்க நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனருமான ரமேஷ் தியாகராஜன் தனது குடும்பத்திற்கான பங்கினை 2,69,976 ரூபாய்க்கான தொகையை காசோலை வாயிலாக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து வழங்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.
வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை, ராஜேஷ் தியாகராஜன் சந்தித்த போது அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட கோட்டாட்சியர் கோட்டை குமார் அறிவுறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்தித்து தன் குடும்பத்தின் மேல் உள்ள கடன் தொகையை வழங்கிட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு ஆட்சியர் இல்லாததால் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் காசோலையை வழங்காமல் ரமேஷ் திரும்பி சென்றார். தமிழக நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி தனது கடன் பங்கான ரூ.2.69 லட்சத்தினை செலுத்த வந்த நபரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷ் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது,
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதற்காக தனது குடும்பத்திற்கான கடன் தொகையை காசோலையாக வழங்க உள்ளதாகவும், கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டின் நகலையும் தனக்கு தரவேண்டும் என்றும் மேலும் இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு 15 லட்சம் குடும்ப கடனாக வழங்கி குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்கவும் தனி நபருடைய வருமானத்தை பெருக்கி வறுமையையும், ஏழ்மையையும், போக்குவதற்கு கோரிக்கையையும் முன் வைத்து இந்த தொகையை வழங்குகிறேன் என்றும் இந்த தொகையை எனது குடும்பத்தின் சார்பாக வழங்குகிறேன் எனவும் தெரிவித்தார்.





















