சேலத்தில் 69வது வேலைவாய்ப்பு முகாம்; இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய அமைச்சர் சி.வி.கணேசன்
நேற்று வரை ஒரு லட்சத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று தரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தொழிலாளர் துறை இயக்குநர் வீரராகவராவ், வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் லதா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான உத்தரவுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், "தமிழகத்தில் இதுவரை 68 இடங்களில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடந்துள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று தரப்பட்டுள்ளது. இந்த முகாமில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்கள் பி.ஏ, படிப்பார்கள், பின்னர் குரூப் 1 போன்ற தேர்வு எழுதுவார்கள். பலர் வேலை இல்லாமல் அரசின் மீது குறை கூறுவார்கள். டிகிரி படித்திருப்பார்கள் இவர்களுக்கு திறன் பயிற்சி தர முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். வேலை இல்லாமல் வருத்தப்படும் இளைஞர்களுக்காக இந்த திட்டம் கொண்டு வரபட்டுள்ளது. இளைஞர்களின் சர்டிபிகேட்டுகளை தூசி தட்டப்பட்டுள்ளது. இனி இளைஞர்கள் கவலைப்பட தேவையில்லை. இது போன்ற வேலை வாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. கணேசன், “தமிழகத்தில் இதுவரை 68 இடங்களில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடந்துள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று தரப்பட்டுள்ளது. இந்த முகாமில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 1500 இளைஞர்களுக்கு ஆர்டர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். பல ஆண்டுகளாக இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு பதிவு செய்யாமல் இருந்ததை அறிந்த முதலமைச்சர் மூன்று ஆண்டுகள் தளர்வு செய்தார். இதனால் பல இளைஞர்கள் பதிவு பெற்று பலன் பெற்றுள்ளனர். இது தவிர தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் பலரும் வந்தாலும், அவர்களும் நம் மாநில தொழிலாளர்களை போல் கருதி அவர்களுக்கு நிவாரணம் வழங்கி உதவி செய்து வருகிறார்.
வெளி நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் பெற்று வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் படித்து வேலை இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகதான் நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து முழு விவரங்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். படித்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மேலும், மேட்டூரில் திமுக தொண்டர் இறந்ததை அறிந்த தமிழக முதலமைச்சர் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உரிய மரியாதை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.