தஞ்சையில் ஆக்கிரமிப்பில் இருந்த 20 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு - செங்கள் சூளை, ஜல்லி க்ரஷர் நடத்தியவர்கள் மீது வழக்கு
பாலகுரு என்பவர் 1.28 ஏக்கரிலும், சங்கர் என்பவர் 1.66 ஏக்கரிலும், பாண்டியன் என்பவர் 3.16 ஏக்கரிலும் செங்கல் சூளை அமைத்துள்ளதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தல்லுார் அருகே அறநிலையத்துறைக்கு செந்தமான நான்கு கோவில்களுக்குரிய நிலங்களை ஆக்கிரமித்து ஜல்லி கிரஸர், செங்கல் சூளை போன்றவை அமைக்கப்பட்டிருந்த 14 இடங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அரசேரி கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் விவசாய நிலத்தை கோவில் மூலமாக நேரடியாக தமிழ்நாடு விவசாய கூட்டுறவு சங்கத்திற்கு குத்தகை விடப்பட்டிருந்தது. சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கப்பட்டது. அதன்பின்னர், இந்த இடத்தில் தனிநபர்கள் சிலர் அறநிலையத்துறை அனுமதியின்றி ஆகிரமிப்பு செய்தனர். இந்நிலையில், வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட கோவில் இடங்களில் மணல் கொள்ளை மூலம் நஞ்சை நிலங்களில் செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் ஏபரல் ஒன்றாம் தேதி இந்த வழக்கில் நடந்த விசாரணையில் அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நிதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக இருந்த அசோக்குமார், பந்தநல்லுார் போலீசில் அளித்த புகாரை துாசித்தட்டி அரசேரி கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜேந்திரன் என்பவர் 1.87 ஏக்கர் நிலத்தில் செங்கல் சூளை அமைத்தும், 3.94 ஏக்கரில் கட்டடம் கட்டி, தேக்கு, தென்னை மரங்களை வைத்து ஆக்ரமித்துள்ளார். இதை போல பாலகுரு என்பவர் 1.28 ஏக்கரிலும், சங்கர் என்பவர் 1.66 ஏக்கரிலும், பாண்டியன் என்பவர் 3.16 ஏக்கரிலும் செங்கல் சூளை அமைத்துள்ளதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதை போல, நெய்குப்பை சுந்தரேஸ்வரர் கோவில் நிலத்தில், சின்னப்பா என்பவர், மணல் எடுத்து செங்கல் சூளை அமைத்து விற்பனை செய்து நிலத்தை குளமாக மாற்றியுள்ளார். அபிராமபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நெய்குப்பை கிராமத்தில் முத்துசாமி, மகேந்திரன், சாமிதுரை ஆகியோர் மணல் குவாரி அமைத்துள்ளனர். மேலும், நெய்வாசல் தடாகபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தில் மனோகரன் என்பவர் ஜல்லி கிரஸர் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நிலத்தை பாழாக்கியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, முருகராஜ், பூமிநாதன், சாமிதுரை ஆகியோர் எவ்வித அனுமதியின்றி கோவில் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக தற்போதைய பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுந்தரராஜன் ஒரு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கு மயிலாடுதுறை ஜே.சி., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இதையடுத்து நேற்றுமுன்தினம், அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் சுந்தரராஜன், தர்க்கார் கோகிலா தேவி, வருவாய் அலுவலர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள், சம்மந்தப்பட்ட 14 இடங்களுக்கு சீல் வைத்து, நிலத்தை மீட்டனர்.