Female Political Leaders: மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்! - அரசியல் களத்தில் அட்ராசிட்டி செய்த அரசிகளின் லிஸ்ட்!
Female Political Leaders: இந்திய அரசியல் களத்தில் இதுவரை களமிறங்கிய, முக்கிய தலைவர்களின் மனைவிகள் யார், யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Female Political Leaders: இந்திய அரசியல் களத்தில் கவனம் ஈர்த்த முக்கிய தலைவர்களின் மனைவிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அரசியலில் தலைவர்களின் மனைவிகள்:
பெண்களின் வளர்ச்சி, சமத்துவம் என்பன போன்ற வாசகங்கள், தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் தான் இன்றளவும் மேலோங்கி உள்ளது. அதேநேரம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசியலில், பல முக்கிய தலைவர்களின் மனைவிகள் களமிறங்குவது தொடர்கதையாக உள்ளது. அப்படி களமிறங்கியவர்களில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் சோனியா காந்தி உள்ளிட்ட பலரை குறிப்பிடலாம். அந்த வகையில் இந்திய அரசியலில் கவனம் ஈர்த்த, முக்கிய அரசியல் தலைவர்களின் மனைவிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சோனியா காந்தி:
மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் முக்கிய தலைவர்களின் மனைவிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதில் மிக முக்கியமானவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி. இவர் மறைந்த பிரதமரான ராஜீவ் காந்தியின் மனைவி ஆவார். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அரசியலுக்கு வந்தாலும், கட்சியை மீண்டும் கட்டி எழுப்பி நாட்டின் பிரதமராகும் நிலையை எட்டினார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினரான சோனியா காந்தி, இந்திய அரசியலில் தனக்கென முக்கிய இடத்தை பதித்துள்ளார்.
ஜானகி எம்.ஜி.ஆர்.,:
தேசிய அரசியலில் சோனியா காந்தியை பின்பற்றி, தமிழ்நாடு அரசியலில் நுழைந்தவர் ஜானகி எம்.ஜி.ஆர். தனது கணவர் எம்.ஜி.ஆர்., மரணமடைந்ததை தொடர்ந்து நேரடியாக முதலமைச்சராக பொறுப்பேற்று 23 நாட்களுக்கு, தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு அதிமுக ஜ அணி மற்றும் ஜெ அணி என இரண்டாக உடைந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதிமுக கட்சியை ஜெயலலிதா முழுவதுமாக கைப்பற்ற, ஜானகி முழுமையாக அரசியலில் இருந்து ஒதுங்கினார். இருப்பினும், தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகியின் பெயர் வரலாற்றில் தொடர்கிறது.
ராப்ரி தேவி:
மத்திய அமைச்சர், பீகார் மாநில முதலமைச்சர் என பல பதவிகள் வகித்து இருந்தாலும், கால்நடை தீவன முறைகேடு வழக்கின் மூலம் பிரபலமானவர் லாலு பிரசாத் யாதவ். ஊழல் வழக்கில் அவர் கைதானது பிறகு லாலுவின் மனைவி ராப்ரி தேவி பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்று அரசியல் பயணத்தை தொடங்கினார். இதன் மூலம், பீகார் அரசியலில் ராப்ரி தேவி என்பது தவிர்க்க முடியாத பெயராக உள்ளது.
டிம்பிள் யாதவ்:
சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரத மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தேசிய அரசியலில் தீவிரமாக களமாடி வருகிறார். அதேநேரம், அவரது மனைவியான டிம்பிள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேசிய அரசியலில் கவனம் ஈர்த்து வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்:
தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் பெண் அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்க நபராக இருப்பவர், மறைந்த விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா தான். விஜயகாந்த் அரசியலில் களமாடி வந்த சமகாலத்திலேயே பிரேமலதா படிப்படியாக கட்சியில் வளர்ச்சி கண்டார். இருப்பினும், தேர்தலில் களமிறங்கி குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் அவர் ஈட்டவில்லை.
நட்சத்திர வேட்பாளர்கள்:
இப்படிப்பட்ட சூழலில் தான் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா தருமபுரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நடிகரும், அண்மையில் பாஜகவில் இணைக்கப்பட்ட சமக கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், மேலும் இரண்டு அரசியல் தலைவர்களின் மனைவிகள் தமிழக தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். அவர்களின் பயணம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.