OPS : ஓபிஎஸ் எங்கே.? தற்போது என்ன செய்கிறார்.? தோப்பு தனிமரமானதா..!
O Panneerselvam: முதலமைச்சராக , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த ஓபிஎஸ் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்து வருவதை பார்க்க முடிகிறது.
”அதிமுகவை ஒன்றிணைப்போம்”
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி எழுகின்ற அளவுக்கு அவரது நிலைமை உள்ளது என்றே சொல்லலாம். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் விலக்கப்பட்டதில் இருந்து, அதிமுகவை மீட்போம், ஒன்றிணைப்போம் என்ற குரல்களை ஓபிஎஸ் முன்னிறுத்தி வருகிறார். ஓபிஎஸ்-உடன் சசிகலா மற்றும் டிடிவி உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து அதிமுகவை ஒருங்கிணைப்போம் என்ற குரல்களை தெரிவித்து வருகின்றனர்.
”அதிமுகவில் சேர்க்கமாட்டோம்”
ஆனால், அதிமுக கட்சியை தன்வசம் வைத்துள்ள இபிஎஸ், யாரையும் சேர்க்க மாட்டோம் என்ற போக்கை கடைபிடித்து வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில்கூட ஓபிஎஸ்-ஐ இணைக்க கோரி , அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் , இதனால் விரைவில் ஒன்றிணைப்பு நிகழும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், அதற்கான நகர்வு இருப்பதாக தெரியவில்லை, வருங்காலமே பதில் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்?
மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அப்போது வெற்றி பெறுவார் என்றும் சில கருத்து கணிப்புகள் தெரிவித்தன. வெற்றி பெற்றால், தென் மாவட்டங்களில் தனக்கான ஆதிக்கத்தை நிரூபித்து, அதிமுகவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி மீட்டெடுக்கலாம் அல்லது ஒன்றிணையலாம் என ஓபிஎஸ் தரப்பில் திட்டமிடப்பட்டதாக பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.
இந்நிலையில், ஓபிஎஸ் அணி உடன் பயணித்த அதிமுகவின் மூத்த தலைவர் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், பெங்களூரு புகழேந்தி,ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோரும் ஓபிஎஸ் அணியுடன் பயணிக்க போவதில்லை என்றும் , அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை உருவாக்கி அதிமுக-வை ஒருங்கிணைக்க முயற்சிப்போம் என்றும் தெரிவித்தனர். இதனால் , கடைசியில் தனியாக ஓபிஎஸ் இருப்பதை பார்க்க முடிகிறது.
விஜய் பக்கம்
இந்த தருணத்தில் , தனது மகன் ஓ.பி ரவீந்திரநாத் விஜய் கட்சியில் இணைய போவதாகவும் தகவல் வருகின்றன, அவர் விஜய் மாநாட்டில் பங்கேற்க போவதாகவும், நிதி அளித்ததாகவும்கூட தகவல் வெளியானது. ஒருவேளை மகனை வைத்து ஓபிஎஸ் நகர்வை மேற்கொள்கிறாரா, விஜய்யுடன் இணைய திட்டமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் ,சமீபத்தில் அரசு கள்ளர் பள்ளிகளை , பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இணைக்க போவதாக கூறிய தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்திய நிலையிலும் , முக்குலத்தோர் முகமாக அதிமுகவில் முன்பு பார்க்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பில் பெரிதாக எதிர்ப்போ , ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ( சமக்ரா சிக்சா திட்டம் ) கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்குவது குறித்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், பாஜக கூட்டணி அரசை வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ், பாஜகவிடம் கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை.
இனிமேல் நல்ல காலம்?
இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கையில், அவர் தனது குடும்ப ஜோதிடருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப செயலாற்றி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஜோதிடரின் ஆலோசனை அடிப்படையில், தற்போது சென்னையில் உள்ள தனது வீட்டை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் , விரைவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறப் போவதாகவும் தகவல் வருகிறது. இதுவரை பாதகமான சில நிகழ்வுகள் நீடித்த நிலையில், இனிமேல் சாதகமான சூழல்தான் நிகழும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புது அவதாரம் எடுத்து ஓபிஎஸ் மீண்டு எழுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read: Speaker Appavu: ரஜினியை அட்டாக் செய்தாரா அப்பாவு? மீண்டும் மீண்டுமா?