விநாயகர் சதுர்த்தி விழா என்பது மத வழிபாடு.. அரசு தலையிடுவது கண்டனத்திற்குரியது - இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்
”விநாயகர் சதுர்த்தி விழாவை வீதியில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி பெற வேண்டுமென்ற தார்மீக உரிமையும் கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மத சடங்குகளை செய்வதற்கு முழு உரிமையும் உள்ளது”
இந்து முன்னணி சார்பில் நெல்லை கோட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் வி பி ஜெயக்குமார் கூறும் பொழுது,
விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் ”பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம்” என்ற தலைப்பில் கொண்டாட உள்ளோம். தமிழகம் முழுவதும் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஜர்சனம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி என்பது மத வழிபாடு. இதில் அரசு தலையிடுவது என்பது கண்டனத்திற்குரிய செயல். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத வழிபாட்டிற்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியும் அதன்படி கொண்டாடுவதற்கு உரிமை உள்ளது. நாங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கெடுபிடி விதித்து அலைக்கழிக்கிறார்கள். மத வழிபாட்டிற்கு குறுக்கீடு செய்வது நியாமில்லை.
விநாயகர் சதுர்த்தி விழாவை வீதியில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி பெற வேண்டுமென்ற தார்மீக உரிமையும் கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மத சடங்குகளை செய்வதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் இது போல் பல நடைமுறைகள் உள்ளது. தமிழகத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் தொடங்கி இந்நாள் முதல்வர் வரை இதுபோன்ற நடைமுறைகளை வகுக்கின்றனர். இதில் விதிவிலக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டும் தான் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுத்தது கிடையாது. அமைதியாகவும் விழாவை சிறப்பாகவும் நடத்த பாதுகாப்பு வழங்க மட்டுமே முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சட்டத்தின் பிடிக்குள் வைத்து நடத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக பிரச்சினைகள் ஏற்படும். காவல்துறை முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் குற்றாலநாதன் ராமநாயகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவா சுடலை ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்