விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்! பரபரப்பான சந்திப்பு, எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
"இன்று நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அதிகளவு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது"

விஜய் மக்கள் சந்தியில் பெருமளவில் பெண்களுக்கு மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக வெற்றி கழகம்.
தமிழக வெற்றி கழகம் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். திரை பிரபலமாக இருந்து விஜய் கட்சியை தொடங்கியதால், இளைஞர்கள் மத்தியில் இக்கட்சிக்கு வரவேற்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டமாக பொதுமக்களை சந்தித்து வந்திருந்தார். திருச்சியில் தொடங்கிய அவரது சந்திப்பு நிகழ்ச்சிக்கு, ரசிகர் மத்தியில் அதிகளவு வரவேற்பு இருந்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
அதன் ஒரு பகுதியாக கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி மாலையில் நடந்த கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு அவசர அவசரமாக பேசிவிட்டுப் புறப்பட்ட விஜய், விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்தடைந்தார். இந்தக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், விஜய் கரூர் சென்று சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி, மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை அழைத்து விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு கூட்டம்
கரூர் சம்பவத்துக்கு பிறகு பொதுமக்களை சந்திக்கும் தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ளே அரங்கில் இன்று 11 மணியளவில் வருகை தந்து மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் என்ஜியோ உறுப்பினர்கள், தவெக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட மாநகர், நகர், பேரூர், ஒன்றிய செயலாளர்கள் 500 நபர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே கியூ.ஆர் கோடுடன் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தீவிர சோதனை
10 மணியளவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கல்லூரிக்குள் உள்ளே சென்றடையவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி காலை 11 மணி முதல் 1 மணிக்கும் வரை நடைபெறும் எனவும், முடிந்ததும் பொதுமக்களுக்கு அறுசுவை மத்திய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியில் உள்ளே நிகழ்ச்சி நடைபெறுவதால் காவல்துறை அனுமதி தேவையில்லை எனவும், பாதுகாப்பு கேட்டு போலீசாருக்கு மனு அளித்ததால் கல்லூரியின் வாசலில் சம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் விஜய் ஒரு மணி நேரம் மட்டுமே பங்கேற்க உள்ளார். தனியார் செக்யூரிட்டி மூலம் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.





















