பாஜகவுக்கு நோ சொன்ன விஜய்.. மோடி கனவில் மண் அள்ளிப்போட்ட தவெக? பயங்கர நோஸ் கட்
பாஜக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த கூட்டணியில் இணைய விஜய் விரும்பவில்லை என்றும் கொள்கை எதிரியான பாஜகவை தொடர்ந்து எதிர்க்கவே அவர் முனைப்பு காட்டி வருவதாக தவெக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் ஒரு வருடம் இருப்பதாகவும் இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் பதில் அளித்தார். இதையடுத்து, பாஜக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த கூட்டணியில் இணைய விஜய் விரும்பவில்லை என்றும் கொள்கை எதிரியான பாஜகவை தொடர்ந்து எதிர்க்கவே அவர் முனைப்பு காட்டி வருவதாக தவெக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாஜகவுக்கு நோஸ் கட் தந்த விஜய்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள திமுகவை அதன் கோட்டையில் வீழ்த்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காகவே, பலமான கூட்டணியை அமைக்கும் நோக்கில் அதிமுகவுடன் கைகோர்த்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை, திமுக எளிதாக வெற்றிபெற்று விடும் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால், கூட்டணி கணக்கு மாறி, அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது.
இது, திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், கூட்டணியை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் டெல்லியில் நடந்து வருவதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதாவது, அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக அல்லது நாம் தமிழரை கொண்டு வர பாஜகவின் தேசிய தலைமை முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இரண்டில் ஒரு கட்சியை கூட்டணியில் கொண்டு வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதியாகிவிடும் என பாஜக தேசிய தலைவர்கள் கருதினர். இதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பச்சை கொடி காட்டியதாக கூறப்படுகிறது.
மோடி கனவில் மண் அள்ளிப்போட்ட தவெக?
இதையடுத்து, ஆதவ் ஆர்ஜூனா மூலம் பாஜக தலைவர்கள் காய்களை நகர்த்தியதாகவும் ஆனால், அதற்கு விஜய் உறுதியாக நோ சொல்லிவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு தேர்தல் கணக்கும் ஒரு காரணம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பை தீவிரமாக முன்னெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பாஜகவுக்கு ஆதரவு வாக்குகளை காட்டிலும் எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம். குறிப்பாக, சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ஒரு கட்சியாக இருப்பதால், அக்கட்சியின் கூட்டணி வைக்க தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தன.
இருப்பினும், கடந்த 1998ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவுடன் கூட்டணி வைத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் பாஜக கூட்டணி பெரிய வெற்றியை பதிவு செய்தாலும், அதன் பிறகு, நடந்த எந்த தேர்தலிலும் பாஜக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெற்றதில்லை.
டெல்லி பாஜகவின் மூவ்:
இதன் காரணமாகவே, விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் கூட்டத்திலேயே பாஜகதான், தன்னுடைய கொள்கை எதிரி என விஜய் வெளிப்படையாக கூறினார். இந்த சூழலில்தான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம், "பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா" என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இன்னும் ஒரு வருடம் இருப்பதாகவும் இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனக் கூறினார்.
இதை வைத்து பாஜக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக திமுக தரப்பில் நரேட்டிவ் செட் செய்யப்படுகிறது. கிறிஸ்தவர் என்பதால் விஜய்க்கு பெரிய அளவில் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதை உடைப்பதற்காகவே, விஜய்யை பாஜகவின் பி டீம் என திமுக முத்திரை குத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது, தேர்தலில் எந்த அளவுக்கு பயன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















