"கேள்வி கேட்க முடியாத அப்பழுக்கற்ற அமைப்பு" ஆர்எஸ்எஸ்க்கு குடியரசு துணை தலைவர் புகழாரம்!
தேசத்திற்கு சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புள்ள தன்னலமற்ற மக்களை உள்ளடக்கிய அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணை தலைவருமான ஜெகதீப் தன்கர் புகழாரம் சூட்டினார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. லால் ஜி சுமன் இன்று மாநிலங்களவையில் பேசினார்.
அப்போது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை குறித்து விமர்சித்த அவர், "ஒருவரின் தரத்தை அளவிட அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவரா? இல்லையா? என்பதை மட்டும்தான் மத்திய அரசு கருத்தில் கொள்கிறது" என்றார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்து தள்ளிய குடியரசு துணை தலைவர்: இந்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், "இதை அரசியல் ஆக்கும் வகையில் செல்லக் கூடாது என அவையில் கூறி உள்ளேன். மதிப்புமிக்க உறுப்பினர், விதிகளை மீறவில்லை. அவர் இந்திய அரசியலமைப்பை காலில் போட்டு மிதிக்கிறார்.
ஆர்எஸ்எஸ் என்பது உலகளாவிய உயரிய சிந்தனைக் குழுவாகும். தேசத்திற்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டேன். அரசியலமைப்பின் கீழ், தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் அனைத்து உரிமைகளும் ஆர்.எஸ்.எஸ்க்கு உள்ளது.
ஆர்எஸ்எஸ் இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கான முழு அரசியலமைப்பு உரிமைகளைக் கொண்ட அமைப்பு என்று நான் இதன்மூலம் சொல்லி கொள்கிறேன். அது, கேள்வி கேட்க முடியாத அப்பழுக்கற்ற அமைப்பு.
"தன்னலமின்றி தேசத்திற்கு சேவை செய்கிறது" தன்னலமின்றி தேசத்திற்கு சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புள்ள மக்களை உள்ளடக்கியது. அந்த அமைப்பின் உறுப்பினர் தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று விதிவிலக்கு கேட்பது அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கு அப்பாற்பட்டது.
இது ஒரு நாசகரமான வடிவமைப்பு. நாட்டின் வளர்ச்சியைக் குறைக்கும் ஒரு மோசமான வழிமுறை. நாட்டிற்குள்ளும் வெளியிலும் நமது நிறுவனங்களையும், அரசியலமைப்பு நிறுவனங்களையும் களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நம் அனைவராலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளேன்.
நாம் அதைச் செய்யத் தவறினால், இந்தச் சந்தர்ப்பத்தில் நமது மௌனம் இன்னும் பல ஆண்டுகளாக நம் காதுகளில் எதிரொலிக்கும்" என்றார்.