உச்ச நீதிமன்றத்தையே உதாசீனப்படுத்தி விட்டு எப்படி ஆளுநராக ரவி தொடர்கிறார் ? - ரவிக்குமார் கேள்வி
திமுக அரசுக்கும், தமிழக மக்களுக்கு ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்திற்குமே களங்கமாக ஆளுநர் திகழ்கிறார் - ரவிக்குமார்
விழுப்புரம்: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என மறுத்து நீதித்துறையே கேலி செய்து இன்றைக்கு களங்கமாக இருக்கிற தமிழக ஆளுநர் சுயமரியாதை கொண்ட ஆளுநராக இருந்தால் உச்சநீதிமன்ற கருத்தினை கேட்டு அவர் தானாகவே ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும். இது தான் அவருக்கு அழகு விசிக வேட்பாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு களங்கமாக திகழும் ஆளுநர்
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளராக திமுக கூட்டணியில் அறிவிக்கபட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் திமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விசிக விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் ரவிக்குமார் உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை நிறுத்தி வைப்பதாக தீர்ப்பு வழங்கிய பிறகும் நான் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என மறுத்து நீதித்துறையே கேலி செய்து இன்றைக்கு களங்கமாக இருக்கிற தமிழக ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் சரியாக வாங்கி கட்டி கொண்டு இருப்பதாகவும், ஆளுநர் எத்தனை முறை குட்டுபட்டாலும் இந்த செயலையே திரும்ப திரும்ப செய்வதாகவும், திமுக அரசுக்கும், தமிழக மக்களுக்கு ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்திற்குமே களங்கமாக ஆளுநர் திகழ்வதாக தெரிவித்தார்.
ஆளுநர் பதவி விலக வேண்டும்
உச்ச நீதிமன்றத்தையே உதாசீனப்படுத்தி விட்டு எப்படி ஆளுநராக ரவி தொடர்கிறார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளதாகவும், சுயமரியாதை கொண்ட ஆளுநராக இருந்தால் உச்சநீதிம்னற கருத்தினை கேட்டு அவர் தானாகவே ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் இது தான் அவருக்கு அழகு, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறினார். தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பாஜக அரசு இந்திய அளவில் மெகா ஊழலை செய்துள்ளதாகவும், பாஜக இன்றைக்கு அதிமுக இரண்டாம் இடம் வரக்கூடாது என்பதற்காக எல்லாவித தந்திரங்களையும் கையாள்வதாகவும், அதிமுகவை சின்னபின்னமாக்கி விட்டு அந்த இடத்தில் பாஜக வரபேண்டுமென மோடி செயல்படுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரண் திமுக
வருகின்ற2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவினருக்கான தேர்தலாக இருக்க வேண்டுமென பாஜக செயல்படுவதாகவும், மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வரப்போவதில்லை வட மாநிலங்களில் அவரது செல்வாக்கு சரிந்து வருவதாக தெரிவித்தார். இந்திய அரசியலை தீர்மானிக்கிற கட்சியாக முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும், தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரண் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.