“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
உங்களால் மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மதிப்பு வாய்ந்த கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. பொது மேடை போட்டு விசிகவோடு விவாதிக்க அரசியல் களத்தில் யார் தயார் ? - திருமா கேள்வி
அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும் அதில் அதிமுக உள்பட மதுவிற்கு எதிரான இயக்கங்கள் பங்கேற்கலாம் என்று பொது அழைப்பு விடுத்தார் திருமாவளவன். அப்போது முதல் திமுக கூட்டணியில் அவருக்கு நெருடல் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகப்போகிறது எனவும் பேசப்பட்டன, விவாதிக்கப்பட்டன. அதற்கு ஏற்றாவாறு திருவாரூரில் பேசிய திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டால் கூட்டணியில் ஏதேனும் இறக்கம் வந்தாலும் அதனை எதிர்க்கொள்ளவும் தயார் என்று கூறியிருந்தார்.
முதல்வரை சந்தித்த திருமா – மாநாட்டில் பங்கேற்கும் திமுக
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார். அப்போது திமுக சார்பில் மது ஒழிப்பு மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ் இளங்கோவனும் பங்கேற்பார்கள் எனவும் திருமாவளவனிடம் முதல்வர் தெரிவித்தார். இதனையடுத்து, வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவிற்கு நாங்கள் நேரடியாக எந்த அழைப்பும் விடுக்கவில்லையென்றும் நாங்கள் பேசிய கருத்தின் அடிப்படையில் இந்த மாநாட்டில் திமுக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று முதல்வரே சொல்லிவிட்டார் எனவும் தெரிவித்தார்.
அதோடு திமுக கூட்டணியில் எந்த பிளவும் நெருடலும் இல்லை என்றும் வெளிப்படையாக அறிவித்தார். இதனால், ஒருவழியாக இந்த சர்ச்சை ஓய்ந்துவிட்டது என இருந்த நிலையில், கிணறு வெட்ட பூதம் கிளம்பியது மாதிரி மீண்டும் அடுத்த சர்ச்சை வெடித்திருக்கிறது
வருங்கால முதல்வர் திருமா – முழக்கமிட்ட சிறுத்தைகள்
மதுரை விமான நிலையத்திற்கு சென்ற திருமாவளவனை வரவேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுத்த கையோடு, அவரை வருங்கால முதல்வர் என்று வாழ்த்து முழக்கமிட்டது திமுக தரப்பினரை உஷ்ணத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கெஞ்சிக்கொண்டிருப்பது எங்களுக்கு பழக்கமில்லை – திருமா ஆவேசம்
இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய திருமாவளவன், “நம்மை சிலர் சராசரியான சாதியவாதிகளாக பார்த்து வருகிறார்கள். எதோ விவரமில்லாமல் ஒரு கும்பல் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது என குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள். சாதி அடிப்படையில் இவர்கள் கொஞ்சம் பேரை வைத்துக்கொண்டு 4 பேர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக இவர்கள் திமுகவிடமும் அதிமுகவிடமும் கெஞ்சிக் கிடக்கிறார்கள் என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள்
உங்களால் மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மதிப்பு வாய்ந்த கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. பொது மேடை போட்டு விசிகவோடு விவாதிக்க அரசியல் களத்தில் யார் தயார் ? கருத்தியல் சார்ந்த விவாதத்தை நடத்த எத்தனை அரசியல் கட்சிகளுக்கு இங்கு திராணி இருக்கிறது? விசிக ஒரு சராசரியான அரசியல் இயக்கமல்ல, இந்த வார்த்தைகளை நீங்கள் அடிகோடிட்டு கொள்ளுங்கள். இந்த இயக்கம் வெறும் அதிகார வேட்கை கொண்ட இயக்கம் அல்ல.
சமூக மாற்றத்தை, சமத்துவ இலக்கை நோக்கி போராளிகளை கொண்ட இயக்கம், காலம் அதனை உங்களுக்கு அதனை காட்டும்” என பேசியுள்ளார்.
மக்கள் நலனா ? கட்சியின் நலனா ? – திருமா பதில்
அதோடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தினால் கூட்டணி தலைமை கட்சியான திமுக வருத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கூட இந்த திருமாவளவனால் யூகிக்க முடியாதா என்ன ? என கேள்வி எழுப்பியுள்ள திருமா, இந்த விவகாரத்தில் மக்கள் நலனா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நலனா என்று பார்த்தால், மக்கள் நலனே பிரதானமானது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.