’பெரியார் நெடுஞ்சாலை என்ற பெயரே தொடரவேண்டும்’ - முதல்வருக்கு வைகோ வலியுறுத்தல்..
பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றனர். 1979-ஆம் ஆண்டு பெரியாரின் நூற்றாண்டு விழாவை, ஓராண்டு விழாவாக எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு கொண்டாடியது. அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்று அழைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, எம்.ஜி.ஆர். பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு” என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறது. மோடி பிறப்பித்த ஆணையை, எடப்பாடி நிறைவேற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார். ஏற்கனவே, சென்னை வான்ஊர்தி நிலையத்தில் இருந்து காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை.
தமிழக முதல் அமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடி, தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும். பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கிற தி.மு.க. ஆட்சி பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.