உதயநிதி ஸ்டாலின் டி - சர்ட் அணிந்து செல்வது அரை வேக்காடு தனத்தை காட்டுகிறது - ஜெயக்குமார்
தலைமைச் செயலாளரோ , துறைச் செயலாளரோ டி-சர்ட் அணிந்து வந்தால் உதயநிதி ஒப்புக் கொள்வாரா. உதயநிதி டி ஷர்ட் அணிந்து செல்வது அவரது அரைவேக்காடுத்தனத்தை தான் காட்டுகிறது என ஜெயக்குமார் காட்டம்.
சொத்து வரி , பத்திர பதிவு உயர்வு - அதிமுக வினர் ஆர்பாட்டம்
சொத்து வரி உயர்வு , மின்கட்டண உயர்வு , பத்திரப்பதிவு உயர்வு , பால் விலை உயர்வு , மயான பூமியை தனியார் மயமாக்குதல் என தமிழக மக்களின் வாழ்க்கையை திமுக அரசு சீரழித்து வருவதாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை ராயபுரம் பாஷ்யம் நாயுடு தெருவில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ;
சென்னை மாவட்டத்தில் 200 வட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல வான்சாகச நிகழ்ச்சி அசம்பாவிதங்களை மறைத்துள்ளார்கள். வான் சாகச அசம்பாவிதங்களுக்கு மாநில அரசு தான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சாகச நிகழ்ச்சியில் முறையான திட்டமிடல் , குடிநீர் வசதி , சுகாதார வசதி , ஆம்புலன்ஸ் வசதி , பேருந்து வசதி என எதுவுமே இல்லை. சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒவ்வொருவரும் வயித் தெரிச்சலில் திமுக அரசை சபித்து விட்டு சென்றார்கள்.
அமைச்சர் கூச்ச நாச்சமே இல்லாம பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூச்ச நாச்சமே இல்லாமல் பேட்டி அளித்துள்ளார். சேகர் பாபு கூறுவதை தான் சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்கிறார். போன் செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பேச முடியவில்லை. கார் - ரேசுக்கு காட்டிய கவனத்தை வான் சாகச நிகழ்ச்சிக்கு காட்டவில்லை. கார் பந்தயத்திற்கு உதயநிதி காட்டிய ஆர்வத்தை வான் சாகச நிகழ்ச்சிக்கு காட்டவில்லை. 5 பேரின் உயிர் பறி போய் உள்ளது நீதிமன்றம் சும்மா விடக் கூடாது. உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் போதாது 10 லட்சம் வழங்க வேண்டும்.
துறை செயலாளர்கள் டி - சர்ட் அணிந்தால் , உதயநிதி ஒத்து கொள்ளுவாரா ?
முதலமைச்சரின் குடும்பத்திற்கு ஏர்கூலர் வசதியோடு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறப்பை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
தனியார் நிகழ்ச்சிகளில் டி-ஷர்ட் போடலாம். நானே பல தனியார் நிகழ்ச்சிகளில் டி-ஷர்ட் அணிந்து தான் செல்வேன். ஆனால் அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சராக இருந்து கொண்டு உதயநிதி டி ஷர்ட் அணிந்து செல்லலாமா ? தலைமைச் செயலாளரோ , துறை செயலாளரோ டீசர்ட் அணிந்து வந்தால் உதயநிதி ஒத்துக் கொள்வாரா என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி டீ - சர்ட் அணிந்து செல்வது அரைவேக்காடு தனத்தை தான் காட்டுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி மரபை பின்பற்ற வேண்டும், மரபு மீறி செயல்படக்கூடாது என தெரிவித்தார்.