Udhayanidhi Stalin: “அதிமுகவின் தலைவர் யார் தெரியுமா.?“ புட்டு புட்டு வைத்த உதயநிதி - இப்படி சொல்லிட்டாரே.?!
விருதுநகர் சாத்தூரில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய உதயநிதி, பின்னர் பேசும்போது, அதிமுக தலைவர் யார் என்பது குறித்த விமர்சனத்தை முன் வைத்தார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் உதயநிதி ஸ்டாலின், இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் உரையாற்றும்போது, அதிமுகவின் தலைவர் அமித் ஷா தான் என்று தெரிவித்தார். அவர் பேசியது குறித்து இப்போது பார்க்கலாம்.
“அதிமுக தலைவர் அமித் ஷா தான் என்பதை அக்கட்சியின் தலைவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்“
சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகயிடையே உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணி உருவாவதாகவும், தற்போது செங்கோட்டையன் அணி உருவாகி இருப்பதாகவும் கூறினார்.
மேலும், அவர் ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அமித் ஷாவை சந்திக்கிறார் என்று கூறிய உதயநிதி, எடப்பாடி பழனிசாமியும் 4 கார்கள் மாறி அமித் ஷாவை சந்திப்பதாக விமர்சித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி வெளியில் வரும்போது மூடிக்கொண்டு வருகிறார். செய்தியாளர்கள் படம் பிடித்துப் போட்டதும், முகத்தை துடைத்தேன் என கூறுவதாகவும் விமர்சித்தார்.
அதோடு, ஏசி காரிலேயே வியர்க்கும் அளவிற்கு என்ன நடந்துது என்று கேள்வி எழுப்பிய அவர், வடிவேலு படக் காமெடியில் வருவதுபோல், பேக்கரி டீலிங் நடந்துள்ளது என கிண்டலடித்தார்.
மேலும், அமித் ஷா தான் தங்கள் தலைவர் என்று அதிமுக தலைவர்களே ஒப்புக்கொள்வதாக தெரிவித்த உதயநிதி, திமுக கூட்டணி உடைந்துவிடாதா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
“திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி“
தொடர்ந்து பேசிய உதயநிதி, திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி என்றும் அனைத்து தலைவர்களுடனும் அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர் திமுக தலைவர் என்றும், அதனால்தான் இந்த கூட்டணி இத்தனை ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து வெற்றிகளை பெறுவதாகவும் கூறினார்.
வரும் தேர்தலிலும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
“அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ரோல் மாடல் நமது முதலமைச்சர் ஸ்டாலின்“
மேலும், மாநில உரிமைகளை பாதுகாக்க, இந்தியாவிலேயே பாஜகவை எதிர்த்து போராடக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மட்டும்தான் என தெரிவித்த உதயநிதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ரோல் மாடலாக அவர் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
அதோடு, இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக கூறிய அவர், அதனால் தான் மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாட்டிற்கு கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
ஆனால், எவ்வளவு பிரச்னை வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வலிமை திமுகவிற்கு உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.






















