"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல" - கொளத்தூர் மணி
தோற்று போய், வாய்ப்பு மறுத்தவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள் எனவும் சாடினார்.
சேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என சேலத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய டேவிட், அருள், கிருஷ்ணன், அம்பிகாபதி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசத் தூண்டியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக கொளத்தூர் மணி உட்பட 5 பேரும் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
பின்னர், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "திமுகவின் கொள்கைகளை அழுத்தமாக பேசி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல. கொள்கை வாரிசு அரசியல் என்றார். மேலும் தோற்று போய், வாய்ப்பு மறுத்தவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள் என சாடினார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டபோது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பை உருவாக்கவே பாஜக மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனையை பெரிதாக்கியது. ஆனால் தலைநகர் டெல்லியில் மருத்துவர் கொல்லப்பட்டது குறித்து யாரும் குரல் கொடுக்காமல் வாயை மூடிக் கொண்டு உள்ளதாக தெரிவித்த கொளத்தூர் மணி, தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திடீரென வெளியே வந்துள்ள எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.