உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் காத்திருக்கிறேன் - எஸ்.எஸ்.சிவசங்கர்
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக வர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் காத்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக புதிய பேருந்து வழி தட திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்ட்ரல் முதல் மயிலாப்பூர் டேங்க் வரை தினந்தோறும் 20 முறை இந்த வழித்தடம் வழியாக சிற்றுந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சென்னையில் எந்த பகுதிகளில் எல்லாம் பள்ளி மாணவர்கள் செல்ல போதுமான பேருந்துகள் இல்லையோ அந்த பகுதிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து கண்டறிந்து போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், இரவு பேருந்துகள் போதுமான அளவு இயக்கப்படாத இடங்களையும் கண்டறிந்து பழையபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், சென்னை மாநகராட்சியில் எங்கெல்லாம் பேருந்து வசதிகள் இல்லையோ அங்கெல்லாம் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கைக்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று மிகசிறந்த சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி செய்யும் பணியை மக்கள் பார்ப்பது போல், அவர் அமைச்சரானார், மிக சிறப்பாக செயல்படுவார் எனவே அவர் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை தாமும் முன்வைப்பதாக கூறினார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், ஆம்னி பேருந்து களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் கிடைத்தால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.