கரூர் துயரத்திற்குப் பின் விஜய்: காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு! அரசியல் கட்சிகளின் காஞ்சிபுரம் சென்டிமென்ட்!
Kanchipuram tvk Vijay: "காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், காஞ்சிபுரம் மாவட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளார்"

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு, நாளை காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை விஜய் நடத்துள்ளார். உள்ளரங்கில் நடைபெறும் கூட்டம் என்பதால் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். திரை பிரபலமாக இருந்து விஜய் கட்சியை தொடங்கியதால், இளைஞர்கள் மத்தியில் இக்கட்சிக்கு வரவேற்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டமாக பொதுமக்களை சந்தித்து வந்திருந்தார். திருச்சியில் தொடங்கிய அவரது சந்திப்பு நிகழ்ச்சிக்கு, ரசிகர் மத்தியில் அதிகளவு வரவேற்பு இருந்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
அதன் ஒரு பகுதியாக கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி மாலையில் நடந்த கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு அவசர அவசரமாக பேசிவிட்டுப் புறப்பட்ட விஜய், விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்தடைந்தார். இந்தக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், விஜய் கரூர் சென்று சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி, மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை அழைத்து விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தலைமையிலான கூட்டணி அமையும் என, அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் பணிகள் வேகம் எடுத்தன, குறிப்பாக தொண்டரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, தொண்டர் பணி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சேலத்தில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் அனுமதி கேட்டு இருந்த தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் சேலத்திற்கு முன்பாக காஞ்சிபுரத்தில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் உள்ளரங்கு கூட்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளரங்க கூட்டம் என்பதால் முன் அனுமதி அளிக்கப்பட்ட 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சென்டிமென்ட் ?
காஞ்சிபுரம் ஆன்மீக பூமி மற்றும் அண்ணா பிறந்த மண் என்பதால் அரசியல் கட்சிகளுக்கு காஞ்சிபுரம் எப்போதும் செண்டிமெண்டாக பார்க்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் காஞ்சிபுரத்திலிருந்து பல்வேறு முக்கிய அரசியல் கூட்டங்களை நடத்தி இருக்கின்றனர்.
அதேபோன்று விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளின் கூட்டத்தை காஞ்சிபுரத்தில் நடத்த ஆலோசித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தான் கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதால், அது காஞ்சிபுரத்திலிருந்து தொடங்குவதை விஜய் சென்டிமெண்டாக பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





















