’’மீனாகுமாரி கேரவனில் செல்லும் விஜய்க்கு பாமர மக்கள் தேவை தெரியுமா?’’- வைஷ்ணவி கடும் சாடல்!
சொகுசு காரிலும் மீனா குமாரி கேரவனிலும் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவைகள் தெரியுமா? - திமுக வைஷ்ணவி.

சொகுசு காரிலும் மீனா குமாரி கேரவனிலும் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவைகள் தெரியுமா என்று தவெக தலைவர் விஜயை, திமுகவைச் சேர்ந்த வைஷ்ணவி கடுமையாகச் சாடியுள்ளார்.
தவெக தலைவரின் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில் திமுகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார் விஜய். இதற்கிடையே பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள விஜய்க்குத் தயார் செய்யப்பட்ட வண்டியின் புகைப்படங்கள் நேற்று வைரலாகின. விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பிரச்சார வாகனம் குறித்தும் தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
’’மக்களின் மனமறிந்த அரசியல், தோழமையுடன் கூடிய அரசியல் என நடிகர் என்ற பிம்பத்தை வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் விஜய்!
மனசாட்சி உள்ள மக்களாட்சியா? முதலில் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? கட்சித் தொண்டர்களை தொட விடாமல் பவுன்சர்களை வைத்து தாக்குவதும் தடுப்பு கம்பிகளில் கீரிஸ் தடவி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் நீங்கள் ஒரு இயக்கத்தின் தலைவனாகவே இருக்க தகுதியற்றவர்.
மீனா குமாரி கேரவனில் பயணிக்கும் விஜய்!
சொகுசு காரிலும் மீனா குமாரி கேரவனிலும் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவைகள் தெரியுமா? அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம்.
அத்தகைய திட்டங்களால் பயனடைந்த மக்களுக்கு தெரியும் "திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு" என்று!
இவ்வாறு திமுகவைச் சேர்ந்த வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
யார் இந்த வைஷ்ணவி?
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி கவனத்தை ஈர்த்தவர் வைஷ்ணவி. கோவையை சேர்ந்த இவர், ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்களுடன் இணைந்து சமூக சேவை பணிகளையும் செய்து வந்தார். தொடர்ந்து தவெகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த வைஷ்ணவி, அங்கு இளைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றுகூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இவரது தாயார் ஏற்கெனவே திமுக நிர்வாகியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.























