ஓடி ஓடி உழைத்தேன்.. ஏமாத்திட்டாங்க.. கண்ணீருடன், விஜய் காரை மடக்கிய பெண் நிர்வாகி .. நடந்தது என்ன?
"பதவி கிடைக்காத விரக்தியில், விஜய் காரை மறித்து கண்ணீர் மல்க போராடிய பெண் நிர்வாகி செயலால் பனையூரில் பரபரப்பு ஏற்பட்டது"

"தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால், தவெக பெண் நிர்வாகி விஜய் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது"
தமிழக வெற்றி கழகம் - மாவட்ட செயலாளர்கள் நியமனம்
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது மாவட்டச் செயலாளர்கள் நியமனம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நீண்ட நாட்களாகக் கோரப்பட்டு வந்த மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான அறிவிப்புகள் இன்று வெளியாகத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டச் செயலாளர் பணியிடங்களுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்தத் தகவலால் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
கண்ணீர் விட்டு கதறிய பெண் நிர்வாகி
அஜிதா ஆக்னலுக்கே அந்தப் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதவி மறுக்கப்பட்டதாகக் கருதி, அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கட்சித் தலைவர் விஜயைச் சந்தித்துத் தனது தரப்பு நியாயத்தைக் கூற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
தலைமை அலுவலக வளாகத்திலேயே கண்ணீர் மல்கக் காத்திருந்த அஜிதா ஆக்னல், "கட்சிக்காக இரவு பகலாக ஓடி ஓடி உழைத்த எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; தலைவரைச் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கப்படுவது வேதனையளிக்கிறது" எனக் கூறி கதறினார்.
காரை மரித்ததால் பரபரப்பு
தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த அவரது ஆதரவாளர்களும் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது. ஒருகட்டத்தில், அலுவலகப் பணிகளை முடித்துவிட்டுத் தலைவர் விஜய் தனது காரில் கிளம்பியபோது, அஜிதா ஆக்னல் திடீரென காரை மறிக்க முயன்றார்.
உடனடியாக அங்கிருந்த தனியார் பாதுகாவலர்களும் மற்ற நிர்வாகிகளும் அவரை அப்புறப்படுத்தி வழியைச் சீர்செய்தனர். இந்தச் சம்பவம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





















