"தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று நினைத்தால்" : கே.பி ராமலிங்கம் பேச்சு..
ராகுல் காந்தி தங்கையை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சி தலைவராக வந்தால், நாட்டிற்கு தலைவராக வந்தால் நாடு என்ன ஆவது? என்று நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் மாவட்ட பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 9 ஆண்டுகால மக்கள் நலத்திட்ட சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையில், ”அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்றாலும், கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பது போன்று தான் செயல்பட்டு வருவதாக பேசினார். ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளுக்கு குடிநீரை கொண்டு வந்து சேர்த்துள்ளது. 50 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஜன்தன் யோஜனா திட்டத்தில் தொடங்கியதன் மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சாதாரண மக்களால் சேமிக்க முடிந்தது. உலகப் பொருளாதாரத்தின் இந்தியா ஐந்தாவது இடத்தை நோக்கி பயணத்தில் கொண்டிருக்கிறோம் என்றால் பாரத பிரதமர் தான் காரணம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தை விட 5 மடங்கு அதிகமாக நான்கு வழிச்சாலைகள் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் 2 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் சிறந்த பொருளாதார கட்டமைப்பில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
காசி தமிழ் சங்கமம் 25 ஆயிரம் தமிழர்களை மனம் குளிர வைத்த பிரதமர் மோடி, செளராஷ்டிரா தமிழ் சங்கம்ம் நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்துவார். சட்டமன்றத்தில் தேசியமும், தெய்வீகமும் இரண்டு கண்களாக கொண்டுள்ள கட்சி பாஜக தான். சமூக நீதி பாரதிய ஜனதா கட்சியில் மட்டும்தான் உள்ளது. கொரோனா வருது வருது என்று சொல்கிறார்கள் தடுப்பூசி போட்டிருந்தால் போதும், யாரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் கிடையாது. பிரதமர் மோடி இருக்கும் வரை யாருக்கும் எந்த தொற்றுநோயும் வராது” எனவும் பேசினார். இதைதொடர்ந்து பேசிய அவர், ”ராகுல் காந்தி தங்கையை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சி தலைவராக வந்தால், நாட்டிற்கு தலைவராக வந்தால் நாடு என்ன ஆவது?” என்றும் சர்ச்சையாக விமர்சனம் செய்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்று இல்லை என்றாலும், நிச்சயமாக ஒரு நாள் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்று கூறினார்.
இதனிடையே பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசுகையில், ”பிரதமர் மோடி குறித்து கீழ்த்தனமாக ஆ.ராசா பேசுகிறார். அரசியல் பணிகளில் தூசியளவுக்கு கூட தகுதி இல்லாதவர்கள், அரசியல் பதவி பெற்றுவிட்டதால் யாரை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், பாதுகாப்பதால், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த நிமிடம் யோசித்தாலும் அடுத்து அரை மணி நேரத்தில் இந்த ஆட்சி இருக்கும் இடமில்லாமல் போய்விடும்” என்றும் எச்சரித்தார்.