PTR TN Cabinet: பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PTR TN Cabinet: அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றத்திற்கு தயாரான தமிழக அமைச்சரவை?
நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல், பொன்முடி சர்ச்சை பேச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தான், செந்தில் பாலாஜிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், ஏற்கனவே ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்த அவர், ஜாமின் தான் முக்கியம் என கருதுவதாக கூறப்படுகிறது. அதன்படி, வரும் திங்கட்கிழமைக்குள் தனது பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழக அமைச்சரவையில் அடுத்த வாரமே பல முக்கிய மாற்றங்கள் நிகழலாம்.
கடுப்பில் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மீண்டும் ஒருமுறை அமைச்சரவை மாற்றம் நிகழ உள்ளதாக தெரிகிறது. இதில் திறம்பட செயல்படாத, அரசின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்பவர்கள், சுய விளம்பரங்கள் மற்றும் வாரிசுகளுக்கான அரசியல் பாதையை வகுப்பதில் கவனம் செலுத்துபவர்கள் போன்றோரை களைந்து எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக கட்சி தலைமையின் உத்தரவுகளை பின்பற்றாமல், சகட்டுமேனிக்கு பேசி சர்ச்சையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளாராம். அதில் மூத்த அமைச்சர்களான பொன்முடி, மூர்த்தி, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன், காந்தி, கயல்விழி ஆகியோரும் அடங்குவர் என கூறப்படுகிறது.
பிடிஆர்-க்கு அதிகாரமா? தண்டனையா?
இதனிடையே, தன்னிடம் போதிய அதிகாரமும் இல்லை, தனது துறைக்கு நிதியும் இல்லை என, சட்டப்பேரவையிலேயே பேசி அமைச்சர் பிடிஅர் பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி அளித்தார். இதனால் கட்சி தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், கூடுதல் அதிகாரம் கொடுப்பதோடு, அவருக்கு தண்டனை அளிக்கும் விதமாகவும் ஒரு துறை ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டால், அவர் வகித்து வரும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு & ஆயத்தீர்வு துறை அமைச்சர் பிடிஆர்-க்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்?
மின்சாரத்துறை என்பது எப்போதும் சிக்கலானது மற்றும் பொதுமக்களின் வாழ்வுடன் நேரடி தொடர்புடையது. அதோடு தொடர்ந்து ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. கோடை காலமும் நெருங்கி வரும் சூழலில், மின்சார தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தான், மின்சாரத்துறை பிடிஆர்-க்கு வழங்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு பெண்கள் போராடி வரும் நிலையில், பணம் கொழிக்கிறது என்ற ஒரே காரணத்தினால் அரசு வளர்த்து வரும் நிறுவனம் தான் டாஸ்மாக். அதனையும் பிடிஆர் வசமே ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம். இதனால், பிடிஆர்-க்கு கூடுதல் அதிகாரம் கொடுத்ததோடு, அவரது புத்திசாலித்தனத்தை இந்த இரண்டு சர்ச்சை நிறைந்த இலாக்ககளை கையாள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம். அதேநேரம், சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், பிடிஆரின் பெயர் தான் அடிபடும் என்பதால், இதனை அவருக்கான தண்டனையாகவும் வழங்க கட்சி விரும்புகிறதாம்.
தேர்தல் நகர்வுகள்:
மேற்குறிப்பிடப்பட்டவை அனைத்துமே ஆரம்பகட்ட தகவல்களாக மட்டுமே உள்ளன. ஆனால், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் எப்படி நிகழும், யாருக்கு இலாக்காக்கள் கூடுதலாக வழங்கப்படும், யார் தூக்கி அடிக்கப்படுவார்கள், யாருக்கு இலாக்காக்கள் பறிக்கப்படும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே, அமைச்சரவையில் பிரதான மாற்றம் இருக்கும் என தெரிகிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து, சில சமூகம் சார்ந்த வாக்குகளை கவரவும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.





















