Thiruvannamalai: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஜெயலலிதா, இபிஎஸ் புகைப்படங்கள்? அதிமுகவினர் அதிர்ச்சி...!
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 3-ஆம் தேதி வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ‘ஜமாபந்தி’ நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஜமாபந்தியின் நிறைவு நாளான இன்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதற்கு முன்னதாக நிகழ்ச்சியின்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிமுக கட்சியை சேர்ந்த மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் திருவுருவப் படம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் திருவுருவப் படம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அதிரடியாக அகற்றப்பட்டது.
மேலும், சேதமடைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமியின் திருவுருவப் படத்தையும் வட்டாட்சியர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அறிந்த அதிமுகவினர் ஆத்திரம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் என 20க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து வட்டாட்சியரிடம் கேள்வி எழுப்பினர். இதனிடையே ஜமாபந்தி நிறைவு நாள் விழா தொடங்கியதால் அதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
அப்போது அங்கு வந்த அதிமுகவினர் அகற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் படங்களை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் எடப்பாடி பழனிசாமி படத்தை வாங்க சென்றனர். பின்னர் ஜமாபந்தி விழா நிறைவடைந்த பின்னர் வட்டாட்சியர் அறைக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினர் அகற்றப்பட்ட படங்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மனுக்களை பெற்று அவர் உடனடியாக படங்களை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அலுவலக ஊழியர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களை வைத்தனர். அதன் பிறகு அங்கு இருந்து பின்னர் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்