உதயநிதியை பற்றி வாய் தவறி பேசிவிட்டேன் - பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்கு பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார் என்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் கொடுத்தார். அதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதலமைச்சர், அமைச்சர் குறித்து குமரகுரு எந்த இடத்தில் அவதூறாக பேசினாரோ, அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, அதில் முதலமைச்சர், அமைச்சர் குறித்து ஏற்கனவே பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதன்பின்னர் அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் 9-ந்தேதி (அதாவது நேற்று) அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை அதிமுக கூட்டம் நகர செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார். அதுபோல் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்கு ஒரு ரகசியம் உள்ளது என கூறினார். ஆனால் இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை, நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 4 மாவட்டங்களை பிரித்தார். 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து இளம்பெண்கள், இளைஞர் பாசறை மாநாடும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்படும். நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலினை பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்து விட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தேன்.
அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். மேலும் நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் அ.தி.மு.க. பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது" என அவர் பேசினார்.