AIADMK: எடப்பாடி பழனிசாமி வசமான அதிமுக.. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு.. இன்று விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இதில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சியில் இருந்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இதில் தனி நீதிபதி தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அமைந்தது.
தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாததால், தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.
அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்தும் ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த 2 வழக்கையும் விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கினார். இதில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தால் தலைமை இல்லாமல் கட்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அதேசமயம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் கட்சி விதிமீறல் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பு வெளியானதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தனி நீதிபதி தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனி நீதிபதி உத்தரவு முரணாக உள்ளதாகவும், கட்சி விதிகளுக்கு எதிராக தீர்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.