விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
"ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்துள்ளனர்"

கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆசிரியர் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து, பல கட்ட போராட்டங்களை நடத்தி அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ஆசிரியர்களின் அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்ததில் ஆசிரியர் சங்கங்களின் ஆதரவும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது
இந்தநிலையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்தித்து தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டிருப்பது திமுக தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்காமல் போய்விடுமோ என திமுக தலைமை கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் விஜயுடன் சந்திப்பு
ஆசிரியர் சங்கங்களில் மிக முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஆட்சிக்கு வந்து, நான்காண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிர்த்தியை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் கடந்த 13ஆம் தேதி, ஆசிரியர் சங்கத்தின் ஒரு தரப்பினர் விஜயை சந்தித்துள்ளனர்.
அப்போது கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வரை 8 முறை நேரில் சந்தித்தோம். ஒவ்வொரு முறை சந்திப்பு நடைபெறபோதும், தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுப்பார். அதன் பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை, ஊடகங்களுக்கும் வெளியிடுவார். ஆனால் முக்கிய கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விஜய்யிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் கொடுத்த ஆதரவு
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த விஜய், நீங்கள் போராட்டம் நடத்துங்கள், அனைத்திற்கும் என்னுடைய ஆதரவு இருக்கும் என நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார். உளவுத்துறை மூலம் இந்த தகவல் திமுக தலைமைக்கு சென்றடைந்திருக்கிறது. இந்த தகவல் தான் திமுக தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அரசு ஊழியர்களின் ஆதரவு எப்போதும் தங்களுக்கு தான் என திமுக நினைத்திருந்த நிலையில், இது தங்கள் ஓட்டு வங்கியை பாதிக்குமா என திமுக தலைமை ஆராய தொடங்கியிருக்கிறது.
ஜாக்டோ ஜியோ மறுப்பு
இதேபோன்று பிற துறை சேர்ந்த சங்கங்களும், ஆட்சிக்கு எதிராக போர் கோடியை தூக்குவார்களா என்ற ரிப்போர்ட்டையும் திமுக தலைமை கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் தான் ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நாங்கள் விஜயை சந்திக்கவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான அமைக்கப்பட்ட குழு அறிக்கை செப்டம்பர் 30 பெறப்படும் என அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே அரசிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என்பதால் இயக்க நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறிப்பாக தமிழக அரசை சமாதானப்படுத்துவதற்காக, திமுக தலைமையில் அழுத்தத்துடனே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தும் விஜய்யை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்ததால், அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என ஆசிரியர்கள் நம்பிக்கையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.





















