ABP Exclusive: ஆட்டம் ஆரம்பம்... இரக்கமின்றி களையெடுக்க அண்ணாமலை திட்டம்..! பீதியில் பா.ஜ.க. நிர்வாகிகள்
அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்து போயிருக்கிறது பா.ஜ.க. வட்டாரம். அவரது அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிய பிரத்யேக தகவல்கள் ஏபிபி நாடு செய்தி தளத்துக்கு கிடைத்திருக்கின்றன.
பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவ்வபோது பேட்டி கொடுத்தும், ட்விட்டர் பதிவுகள் மூலமும் பரபரப்பை கூட்டிக்கொண்டிருந்தார். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வகுமார் என்பவரை குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார். ஒரு பாஜக நிர்வாகியே மற்றொரு பாஜக நிர்வாகி மீது குற்றம்சாட்டி பதிவிட்டது ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, மற்றொரு பரபரப்பும் சேர்ந்து கிளம்பியது.
பாஜகவில் புதிதாக இணைந்து, ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் திருச்சி சூர்யா, பாஜக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரணை தகாத வார்த்தைகளால் மிரட்டும் ஆடியோ வெளியானதால், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தியிருந்தார்.
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்:
இந்த நிலையில், காயத்ரி பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமாலை அதிரடியாக அறிவித்தார். அதே போல சூர்யா சிவாவிற்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த அதிரடி நடவடிக்கைகள் என்பது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தோம். அதில் ஏகப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடந்த 2 வாரங்களில் இரண்டு முறை அண்னாமலை சந்தித்துள்ளார். அந்த சந்திப்புகள் வெவ்வேறு பொது நிகழ்ச்சிகளின் பின்னணியில் நடந்திருந்தாலும், தமிழக பாஜக-வை பலப்படுத்துவது மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக கட்சிக்குள் இருக்கும் சிலரை களையெடுப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக மக்களவை தேர்தலுக்கு கட்சியை முழு பலத்தோடு தயார்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியத்தை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாராம். பாஜக தேசிய தலைமையும், அண்ணாமலைக்கு முழு அதிகாரம் வழங்கி சில டார்கெட்களை வழங்கியுள்ளதாம். அந்த அடிப்படையில், மூன்று பிரிவுகளாக சிலரை பட்டியலிட்டு கட்சியைவிட்டுத் தூக்க திட்டமிட்டுள்ளாராம் அண்ணாமலை. முதலாவதாக, கட்சியில் இருந்து கொண்டு திமுகவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நீக்கப்போகிறார்களாம். அதேபோல, கட்சியில் இருந்துகொண்டு எந்த வேலையையும் பார்க்காமல், பெருமைக்காக காலத்தை ஓட்டுபவர்கள் எச்சரிக்கப்பட்டு அவர்கள் செயல்படாத பட்சத்தில் நீக்கப்படுவார்களாம்.
இரக்கமின்றி களையெடுக்க திட்டம்:
மூன்றாவதாக, கட்சியை விட தான் தான் பெரியவர் என்று எண்ணிக்கொண்டு கருத்துக்களை பேசுபவர்கள் மற்றும் மனம் போன போக்கில், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பவர்கள் உள்ளிட்டோரை கொஞ்சம் கூட இரக்கமின்றி களையெடுக்க அண்ணாமலைக்கு பச்சைக்கொடி கட்டுகிறதாம் பாஜக மேலிடம்.
அதன் தொடக்கமாகத் தான் காயத்ரி ரகுராம் மீது தைரியமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் அண்ணாமலை என்கிறது பாஜக தரப்பு. அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என்றும், காயத்ரி ரகுராம் ஒரு சாம்பிள் தான் பெரிய தலைகள் இனிமேல்தான் உருளப்போகின்றன. அடுத்த 10 நாட்களில் அடிக்கடி ப்ரேக்கிங் செய்திகள் வரும் என்றும் பீதியைக் கிளப்புகின்றனர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்.