TN Assembly: இன்று கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத் தொடர் - கரூர் To கோல்ட்ரிஃப் மருந்து - முக்கிய பிரச்னைகள்
TN Assembly 2025: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது.

TN Assembly 2025: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடங்கி கோல்ட்ரிஃப் மருந்து உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டப்பேரவை ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று கூட உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதன் முடிவில் இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை, தொடர்ந்து நான்கு நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை தலைவர் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம்போல் சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ந்த 41 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்ட திட்டம்:
- கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான நாளை (அக். 15) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில், 2025-2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.
- மூன்றாம் நாளான வரும் அக். 16-ம் தேதி அன்று கூட்டத்தில் 2025-2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
- கடைசி நாளான வரும் அக். 17-ம் தேதியன்று, கூட்டத் தொடரில் 2025-2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலுரை நடைபெறும்.
கேள்வி நேரமும்.. முக்கிய பிரச்னைகளும்..
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நாளை முதல் 3 நாட்களுக்கும் கேள்வி நேரமும்நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை மையப்படுத்தி அரசை நோக்கி கேள்வி எழுப்ப, பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்டவை திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரம், எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இல்லை, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது, சட்ட-ஒழுங்கு போன்ற பல்வேறு விவகாரங்களை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று தொடங்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசியலில் இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






















