தமிழ்நாட்டில் முதல்முறை - பார்வையற்ற ஒருவருக்கு கட்சி பொறுப்பு கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சி!
வழக்கறிஞராக இருக்கும் பாரதி அண்ணா, இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் சிபிஐ(எம்) கட்சிக்குள் நுழைந்தார்
பார்வையற்ற கட்சி தொண்டரை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளது சிபிஐ(எம்).
பிஎஸ் பாரதி அண்ணா என்ற சிபிஐ(எம்) உறுப்பினர் தற்போது கட்சி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட சிபிஐ(எம்) செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாரதிக்கு பார்வை இல்லை.
தற்போது வழக்கறிஞராக இருக்கும் பாரதி அண்ணா, இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் சிபிஐ(எம்) கட்சிக்குள் நுழைந்தார். முன்னதாக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த அண்ணா, செங்கல்பட்டிலேயே தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளார். தனக்கு பார்வை குறைபாடு பல சங்கடங்களை உண்டாக்கியதாக தெரிவித்துள்ள அவர், மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.
எனக்கு 3 வயது வரை பார்வை இருந்தது. பின்னர் பார்வை குறைபாடு தொடங்கியது. 2014ம் ஆண்டு முழு பார்வையும் இல்லாமல் போனது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைச் செயலாளராக இருந்தேன். ஆனால் பார்வை இழப்பு அனைத்துக்கும் தடை போட்டது. வேலை செய்ய முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்தேன். மன உளைச்சலில் தவித்தேன். பின்னர் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் வேலையை தொடங்கினேன் என்றார்.
பாரதி அண்ணா, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான தமிழ்நாடு சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
சிபிஐ(எம்)ன் இந்த முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ஒருவரின் திறமைக்கு எல்லா துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்படுவது பாராட்ட வேண்டிய ஒன்று என பதிவிட்டு வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?