பீகாரில் பாஜகவின் பண பலத்தை வீழ்த்தும் இந்தியா கூட்டணி! கார்த்திகாவுக்கு காங்கிரஸ் தரும் பரிசு! செல்வ பெருந்தகை அறிவிப்பு
"பீகாரில் பாஜக எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்"

வருகின்ற 14 ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் அன்று, கார்த்திகாவிற்கும் அவரது அணிக்கும் தலா 1 லட்சம் வீதம் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழங்கப்படும் என செல்வ பெருந்தகை அறிவிப்பு.
சாதனை வீராங்கனை கார்த்திகா
ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் தென்னிந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை கண்ணகி நகர் பகுதி வீராங்கனை கார்த்திகா சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற கார்த்திகாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் பரிசுத்தொகைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திகாவை நேரில் சந்தித்த செல்வ பெருந்தகை
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை கண்ணகி நகரில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று கார்த்திகாவிற்கு சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், அடையாறு துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த அன்பு தங்கை கார்த்திகாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். இன்னும் பல வெற்றிகளை பெறுவார்.
தலைவர் ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சார்பில் கார்த்திகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளோம். கார்த்திகா இன்னும் மென்மேலும் சாதனைகள் புரிய காங்கிரஸ் கட்சி அவருக்கு தேவையான உதவிகளை செய்யும். கார்த்திகாவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் கார்த்திகா அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
வருகின்ற 14 ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் அன்று கார்த்திகாவிற்கும் அவரது அணிக்கும் தலா 1 லட்சம் வீதம் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழங்க இருக்கின்றோம் என தெரிவித்தார்.
தமிழகத்தின் கபடி போன்ற கிராமத்து விளையாட்டுகளை ஊக்கிவிக்க வேண்டும் மறைந்து கிடக்கும் நமது கிராமத்து விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுதான் நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் வென்றெடுக்கும் தொடர் முயற்சியாக இருக்கும். இதை துணை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான காமராஜர் மைதானத்தில், விளையாட்டு மைதானங்கள் அமைக்க இருக்கின்றோம். தேவைப்பட்டால் கபடி வீரர்கள் அந்த மைதானத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் தேவையில்லாத ஒன்று
SIR என்பதே இந்த தேசத்திற்கு இப்பொழுது தேவையில்லாத ஒன்று. பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஏ.ஆர் முறைகேடு நடந்து இருக்கின்றது அதனை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்நிலையில் இன்னும் நான்கு மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் வர இருக்கின்றது .பருவமளையும் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை முடித்து விடுவோம் என தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதை எப்படி ஒரு மாதத்தில் முடிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.ஐ.ஆர்-ருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வீ, சல்மான் குர்ஷித் போன்றோர் வாதாட இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.
பீகாரில் வெற்றி
எவ்வளவு பணம் செலவு செய்தாலும் இந்தியா கூட்டணி பிகாரில் நிச்சயம் வெற்றி பெறும். துணை முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் கிராமங்களில் குடிசைகளில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை கண்டுபிடிக்க வேண்டும். தேடல் என்ற ஒரு வெப்சைட் அல்லது இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல கார்த்திகாக்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் வீரர்களையும் வீராங்கனைகளையும் தேடுதல் முயற்சியோடு தேடல் என்ற இயக்கம் மூலம் அவர்களை கண்டுபிடித்து, அவர்களின் திறமைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.





















