ஒரே நாடு- ஒரே பதிவு திட்டத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் காரணங்கள் இதுதான்...
ஒரே நாடு - ஒரே பதிவு திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல முயற்சிகள் நாட்டை ஒரு ஒற்றையாட்சி நாடாக மாற்றும் முயற்சியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட மக்களிடம் வாக்கு சேகரிப்பில் பேசிய முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“ மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி என்ற இந்த முழக்கத்தை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன். மத்திய அரசின் ஒரே நாடு ஒரே பதிவு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல முயற்சிகள் நாட்டை ஒரு ஒற்றையாட்சி நாடாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இதனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதனால்தான் இந்தியா மலர வேண்டும் என்றால் மாநில சுயாட்சி வேண்டும். அதையேதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தி.மு.க.வின் சித்தாந்தத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சி ஆகியவை திராவிட இயக்கம் இந்த நாட்டிற்கு வழங்கிய மகத்தான சித்தாந்தங்கள். நாடு முழுவதும் சமூகநீதி மலர வேண்டும் என்பதை உறுதி செய்யும் பணியில் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் பல மாநில அமைப்புகள் இந்த முயற்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 5 மாநில தேர்தல் முடிந்ததும் இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும்.
தேசத்தின் கூட்டாட்சி உணர்வின்படி, மத்திய அரசு செயல்பட்டு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான அரசு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும் சூழலை உருவாக்கி வருவதால், கூட்டாட்சி இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பல மக்கள் விரோதக் கொள்கைகளின் மூலம் இது தெளிவாகிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ஒரே நாடு - ஒரே பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : MK Stalin : ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்