CM MK Stalin : பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசம் ஆகிவிட்டதா..? பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ’உங்களில் ஒருவன் பதில்கள்..’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
![CM MK Stalin : பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசம் ஆகிவிட்டதா..? பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! Tamil Nadu Chief Minister Mk Stalin answered people's questions under the title of ungalil oruvan CM MK Stalin : பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசம் ஆகிவிட்டதா..? பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/16/52e61fb719c5a5a0865363402cc0e62e1665891123972571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ஓய்வு நேரத்தின்போது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ வாயிலாக பதிலளித்து வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவரது முன்னிலையில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
அதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது ’உங்களில் ஒருவன் பதில்கள்..’ என்ற தலைப்பின் கீழ் இன்று அதற்கு பதிலளித்துள்ளார். அதன் முழு வடிவமும் கேள்வியும், பதில்களாகவும் கீழே காணலாம்.
கேள்வி : பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசத்துக்குப் போய்விட்டதாக சிலர் சொல்கிறார்களே..?
முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் : இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது.
கேள்வி : இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். கழகத்தை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் வைத்துள்ளீர்களா..?
பதில் - அண்ணா வழியில் அயராது உழைப்போம். கலைஞரின் கட்டளையை கண்போல் காப்போம் என்பதை அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போதும் எனது பாதை. கொள்கையும், கோட்பாடும் எவ்வளவு முக்கியம் என்பதை கழக தொண்டர்கள், உடன்பிறப்புகள் உணரவேண்டும். பொதுகுழுவில் பேசும்போது கூட கொள்கை, நட்பையும்தான் அதிகமாக வலியுறுத்தி பேசினேன். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் வழிகாட்டியாக கழகம் இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம்தான் ஆளும் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
கேள்வி : நாற்பதும் நமதே, நாடும் நபதே என்ற முழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனை நிறைவேற்றுவதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்..?
தமிழகம் புதுவை மாநிலங்களில் நாற்பது தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவின் இலக்கு. இந்தியா முழுவதும் சமூகநீதியில், கூட்டாச்சி அடிப்படையிலான நம்பிக்கையான ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்.
கேள்வி : கோபாலபுரம் டூ கோட்டை, இந்த அரை நூற்றாண்டு கால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்..?
பொது வாழ்க்கை என்பது முள் கீரிடம் என்பதுபோல் சொல்வார்கள். என்னுடைய பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் என்பது தலைவர் கலைஞர் சொன்னாரே ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்பது மட்டுமே. என்னை பொறுத்தவரை அந்த உழைப்பால் மக்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதான். அதுதான் எனது பொது வாழ்க்கை. கழக பொறுப்புகள் பொறுத்தவரைக்கும் கோபாலபுரத்தில் 13 வயது இளைஞராக கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கினேன். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளை கடந்து, 50 ஆண்டுகள் சுமந்து வந்ததால்தான் இன்று கழகத்தின் இரண்டாவது முறையாக தலைவராக கழக உடன்பிறப்புகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதேபோல், மக்கள் பணியை பொறுத்தவரைக்கும் மேயராக நான் ஆற்றிய பணிக்கு தலைநகர் சென்னையின் வளர்ச்சியே சாட்சியாக இருக்கிறது. அமைச்சராக, துணை முதலமைச்சராக என் நெஞ்சத்திற்கு நெருக்கமான திட்டங்களை பலமுறை எடுத்து கூறியுள்ளேன். ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு போன்ற திட்டங்கள். தற்போது முதலமைச்சராக காலை உணவுத் திட்டம், மகளிருக்கான இலவச பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டங்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசப்படுவது என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதிற்கு எடுத்து செல்வதே இல்லை. என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது என் வாழ்வின் கடமையாக கருதுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)