TN CM MK Stalin to Visit Delhi : ‘சனாதன சர்ச்சை – திடீரென டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ காரணம் என்ன? Exclusive தகவல்கள்..!
'சனாதனம் குறித்து விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடியை பாஜகவினர் தரவேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாஅன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்’
![TN CM MK Stalin to Visit Delhi : ‘சனாதன சர்ச்சை – திடீரென டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ காரணம் என்ன? Exclusive தகவல்கள்..! Tamil Nadu Chief Minister M.K.Stalin to visit delhi to Participating in a dinner given by the Indian President murmu TN CM MK Stalin to Visit Delhi : ‘சனாதன சர்ச்சை – திடீரென டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ காரணம் என்ன? Exclusive தகவல்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/be8bab6dbed944b9524fb67146b1ef391694067412493108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சனாதனம் குறித்து உதயநிதி பேசிய கருத்துகள் இந்திய அளவில் எதிரொலித்து, சர்ச்சையாகியுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் பயணமாக டெல்லி செல்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![முதல்வர் ஸ்டாலின் - உதயநிதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/846efe6567e2195a79dc77c028511afa1694067610959108_original.jpg)
சனாதன சர்ச்சையை தொடர்ந்து பயணம் ?
டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் வரை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி ?
இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி குறித்து பேசப்பட்டதாகவும் சனாதனத்தை இழிவுப்படுத்தும் எவருக்கும் தக்க பதிலடியை பாஜகவினர் தரவேண்டும் என்றும் பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதோடு, 250க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
இப்படியான சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. அவர் டெல்லி சென்று யாரையெல்லாம் சந்திக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் டெல்லி செல்லும் ஸ்டாலின்
வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி.20 உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரபதிமுர்மு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் வரும் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள், மாநில முதல்வர்களுக்கு விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்தில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரதமரை சந்திப்பாரா முதல்வர் ?
குடியரசுத் தலைவர் தரும் விருந்தில் பிரதமர் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் முக்கிய அமைச்சர்களும் தலைவர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த விருந்தின்போது பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸடாலின் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உதயநிதி மீது பாஜகவும் மத்திய அரசும் கோபமாக உள்ள நிலையில், பிரதமரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒருவேளை அவர் பிரதமரை சந்தித்தால் இன படுகொலை என்ற வார்த்தையையும் இந்துக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உதயநிதி பேசவில்லை என்பதை பிரதமரிடம் அவர் தெளிப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது
இண்டியா கூட்டணி தலைவர்களை சந்திக்கும் ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் விருந்தில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த விருந்திற்கும் வரும் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சனாதன சர்ச்சையில் உதயநிதிக்கு அறிவுரை கூறியுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பனார்ஜியிடம் உதயநிதி பேசிய பேச்சின் சாரம்சத்தை நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உதவியுடன் விளக்கவும் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
வரும் 13ஆம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத தலைவர் சரத்பவார் வீட்டில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதும், இண்டியா கூட்டணி கட்சியினரை சந்திக்கவிருப்பதும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)